ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்ட்ரேலியா அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
மொஹாலியில் நடந்து வரும் இந்தியா- ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 517 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்ட்ரேலியா அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக ஹெடன்- காட்ச் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர். 29 ரன்கள் எடுத்திருந்த ஹெடன், ஹர்பஜன் சிங் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து 20 ரன்கள் எடுத்திருந்த திருப்தியோடு காட்ச் பெவிலியன் திரும்பினார். இவரது விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.
முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்த இந்த இணை 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆஸ்ட்ரேலியா. இதைத் தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
ஹர்பஜன் சிங் தனது மாயால வித்தையை காட்டு மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் வந்த அணித் தலைவர் பாண்டிங் 2 ரன்கள் எடுத்த திருப்தியோடு வெளியேறினார். இவரது விக்கெட்டை இசாந்த் சர்மா கைப்பற்றினார். இவரைத் தொடர்ந்து ஹுசைன் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.
பின்னர் களம் இறங்கிய வாட்சன் 2 ரன்கள் எடுத்திருந்தபோது சர்மா பந்தில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து கிளார்க்கும், ஹெட்டினும் இணை சேர்ந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை ஜாக்கிரதையாக எதிர்கொண்டு விளையாடினர்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்ட்ரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.
கிளார்க் 42 ரன்களுடனும், ஹெட்டின் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
எஞ்சிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றி வாகை சூடும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். |