முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை ஆஸ்ட்ரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் மேத்யூ ஹெய்டன் விக்கெட்டை மட்டும் இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டிங் 41 ரன்களுடனும் கேடிச் 28 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
சுனில் கவாஸ்கர் வர்ணனையில் குறிப்பிட்டது போல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்ட களத்தில், பாண்டிங்கும், கேடிச்சும், ஹெய்டனின் விக்கெட்டுக்கு பிறகு சிறப்பாக விளையாடி நிலை நிறுத்தியுள்ளனர்.
இஷாந்த் ஷர்மாவும், ஜாகீர் கானும் துவக்க ஓவர்களை தீப்பொறி பறக்க வீசினர். வழக்கம்போல் இஷாந்த் ஷர்மாவின் இன்ஸ்விங் பந்திற்கு பாண்டிங் தடுமாறினார். ஒரு முறை ஸ்ட்ரோக் எதுவும் முயற்சி செய்யாமலே கால்காப்பில் வாங்கினார். ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனதால் எல்.பி.டபிள்யூ தரப்படவில்லை.
ஹெய்டன் தவறாக அவுட் கொடுக்கப்பட்டார் என்று பின்பு ரீப்ளேயில் தெரிய வந்துள்ளது. பந்து மட்டையில் படவில்லை என்பது போல் ரீப்ளே காட்டுகிறது.
கேடிச் வழக்கம் போல் தனது நிதானப் போக்கை கடைபிடித்தார். ஹர்பஜன் 8 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்தார். இதுவரை அச்சுறுத்தும் விதமாக இவர் வீசவில்லை. அதேபோல் கும்ளேயும் சிக்கனமாக வீசுகிறாரே தவிர ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்களை தடுமாற்றமடையச் செய்யவில்லை.
உணவு இடைவேளைக்கு பிறகு விக்கெட்டுகள் சரிகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். |