தனது ஓய்வு அறிவிப்பை செவ்வாயன்று வெளியிட்ட சௌரவ் கங்கூலி, தனது முடிவை துரிதப்படுத்தியது இரானி கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததே என்று தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த முடிவிற்கு தான் அவசரமாக வரவில்லை என்றும், இரானி கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததே காரணம் என்றும் அவர் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
"இரானி கோப்பையில் தேர்வு செய்யப்படாது ஏமாற்றம் அளித்தது என்ற உண்மையை நான் மறுக்க முடியாது, நேர்மையாக கூறவேண்டுமென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் சிறப்பாகவே விளையாடியுள்ளேன் இலங்கை தொடர் தவிர. அணிக்கு மீண்டும் வந்த பிறகு விளையாடிய 21 டெஸ்ட் போட்டிகளில் 1,667 ரன்களை 45.05 என்ற சராசரியுடன் அவர் எடுத்துள்ளார்.
4 மூத்த பேட்ஸ்மென்களில் கங்கூலியை மட்டும் அதிகமாக துருவி ஆராயும் காரணம் என்ன என்பது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய கங்கூலி "ஒரு வேளை எனது முகம் பிடிக்கவில்லையோ என்னவோ" என்றார்.
மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவேன் என்று அவர் கூறியதாக எழுந்த செய்திகள் குறித்து கங்கூலி கூறுகையில், தான் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை என்றும், இந்த வாசகங்கள் தனது பழைய நேர்காணலிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
கிரிக்கெட் வாழ்வில் அவருடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு கங்கூலி கூறுகயில் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி தழுவியது தன்னை கடுமையாக ஏமாற்றம் அடையச் செய்தது என்றார். |