சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வரும் 9 ஆம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே, சொந்த மண்ணில் (பெங்களூருவில்)எனது கடைசிப் போட்டியாக இருக்கக்கூடும். ஏனெனில் அடுத்து மீண்டும் இங்கு போட்டி எப்போது நடைபெறும் என்பதைக் கூற முடியாது.
எனது ஓய்வு பற்றி எதையும் கூற முடியாது. தற்போது இதுபற்றி சிந்திக்கவில்லை. உரிய நேரம் வரும்போது ஓய்வு பெறுவது பற்றி அறிவிப்பேன்.
இவ்வாறு அனில் கும்ளே தெரிவித்தார்.
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் கும்ளேவின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. |