கனடாவில் நடைபெறும் 4 நாடுகளுக்கு இடையேயான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி வீரர்கள், அதிகாரிகளுக்கு கனடா நாட்டு தூதரகம் இன்னமும் விசா வழங்கவில்லை.
இதனால் மாற்று அணியை தேர்வு செய்யும் பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் தொடரை நடத்தும் கனடா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் இருந்து வரும் அடக்கு முறை அரசை எதிர்த்து மேற்கத்திய நாடுகள் அந்த நாட்டுடன் எந்தவித விளையாட்டுத் தொடர்பான உறவுகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஜிம்பாப்வேயிற்கு பதிலாக பெர்முடா அணியை அழைக்கலாம் என்று பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.
4 நாடுகள் இருபதுக்கு 20 தொடரில் பாகிஸ்தான், இலங்கை, கனடா ஆகிய நாடுகளுடன் ஜிம்பாப்வே அணியும் பங்கேற்கிறது. முதலில் ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணிதான் இடம்பெற்றிருந்தது, ஆனால் போட்டிகள் நடைபெறும் டொரோண்டோ மைதானம் மோசமான நிலையில் இருப்பதாக காரணம் கூறி மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தொடரில் பங்கேற்க மறுத்து விட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது வீரர்களுக்கான விசாக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. |