ஹைதராபாதில் நடைபெற்ற ஆஸ்ட்ரேலிய, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டாம் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. கடைசி நாளில் யுவ்ராஜ் சதம் அடித்தார். ஜாஃபர் 93 ரன்களை எடுத்தார்.
141 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த வாரியத் தலைவர் அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதி ரன் எண்ணிக்கையான 110/2 என்று நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை துவங்கியது. யுவ்ராஜ் சிங் 7 பவுண்டர்கள் 7 சிக்சர்கள் சகிதம் 143 பந்துகளில் 113 ரன்களை அதிரடி முறையில் பெற்றார். மறு முனையில் வாசிம் ஜாஃபர் அழகான முறையில் ஆடி 93 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
வாரியத் தலைவர் அணி தனது இரண்டாவது இன்னிங்சை 292/4 என்று டிக்ளேர் செய்தது. 434 ரன்கள் வெற்றி இலக்கைக் கொண்டு களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் கேடிச் (5), ஹெய்டன் (14) ஆகியோரை துவக்கத்திலேயே இழந்தனர்.
அதன் பிறகு பாண்டிங் (58), கிளார்க் (36) மேலும் சேதமில்லாமல் தடுத்து போட்டியை டிரா செய்தனர். ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்களின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான் பலவீனங்களை இந்த போட்டியில் பியூஷ் சாவ்லாவும், ஓஜாவும் உறுதி செய்தனர். அவர்கள் எவ்வளவுதான் தங்களை தயார் படுத்திக் கொள்ள எத்தனித்தாலும், இந்த உண்மை ஆஸி. பேட்ஸ்மென்களை சற்றே கூடுதலாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.
வாரியத் தலைவர் அணி ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பு வருகை தந்துள்ள அணிக்கு கிடைக்கவேண்டிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியை முறியடித்தது என்றால் அது மிகையாகாது. |