இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும், ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த இந்திய அணி, 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்ட்ரேலியா 130 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்ரிக்கா 120 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூஸீலாந்து 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இந்தியா 113 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், பாகிஸ்தான் 110 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இலங்கை 105 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளன.
இலங்கை எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், அடுத்த 3 போட்டிகளை கைப்பற்றியதன் மூலம் 3-1 என்ற போட்டிக் கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது. எனினும் சம்பிரதாயப் போட்டியாக கருதப்பட்ட 5வது ஒருநாளில் 112 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் படுதோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்திற்கு பின்தங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வென்று 4-1 என்ற போட்டிக் கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியிருந்தால், தரவரிசைப் பட்டியலில் இந்திய அணிக்கு 115 புள்ளிகள் (4வது இடம்) கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|