இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
துஷாரா ஆட்டமிழக்காமல் 54 ரன்களும், முபாரக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும், உதவத்தே 43 ரன்களும், துவக்க வீரர் வார்னபுரா 30 ரன்களும் எடுத்தனர்.
வெற்றி பெற 228 ரன்கள் தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் கோஹ்லி 31 ரன்களிலும், கம்பீர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து 44 ஓவர்களில் 216 ரன் எடுத்தால் வெற்றி என டக்வர்த்-லூயிஸ் முறையில் வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் இந்திய அணி நடுக்கள ஆட்டக்காரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
யுவராஜ் 17 ரன்கள், ரெய்னா 10 ரன்கள், ரோஹித் சர்மா 3 ரன், தோனி ஒரு ரன், பதான் 7 ரன், ஜாகீர்கான் 3 ரன், ஆர்.பி.சிங் 4 ரன், பிரக்ஞான் ஓஜா 5 ரன்கள், முனாஃப் படேல் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தனர். முடிவில் 26.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை பந்து வீச்சாளர்களில் குலசேகரா, மெண்டிஸ் தலா 4 விக்கெட்டுகளும், பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் ஏற்கனவே நடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடரை இழந்தாலும் 5வது ஒருநாளில் வென்றதன் மூலம் இலங்கை அணி ஆறுதல் தேடிக் கொண்டது.
|