பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான அமீர் சோஹைல், தென் ஆப்பிரிக்காவுடன் கிரிக்கெட் தொடர் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதை கடுமையாக சாடியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தள்ளி வைக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே, இப்படியிருக்கையில் அந்த நாட்டுடன் உடனடியாக ஒரு கிரிக்கெட் தொடரை விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும், இது போன்ற அணுகுமுறையின் அர்த்தம் என்ன? என்று அமிர் சோஹைல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃப் பதவி விலகிவிட்ட பிறகு மற்ற அதிகாரி எப்படி கிரிக்கெட் பயணம் பற்றி முடிவெடுக்க முடியும் என்று அவர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் சாடியுள்ளார்.
பாகிஸ்தானில் விளையாட விரும்பாத ஒரு நாட்டுடன் நாம் கிரிக்கெட் விளையாட எப்படி ஒத்துக் கொள்ளலாம். இது வினோதமாக இருக்கிறது என்கிறார் அமிர் சோஹைல்.
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தள்ளி வைக்கப்பட்டதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான அனுமதியை முன்னாள் தலைவரிடமும் வாரியத்திடமும் தான் பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல்முறை அதிகாரி ஷஃப்கத் நாக்மி கூறியுள்ளார்.
முன்னாள் வீரர்கள் பலரும் சாம்பியன்ஸ் டிராஃபியை தள்ளி வைக்க காரணமாயிருந்த நாடுகளுடன் கிரிக்கெட் ஆட்டம் பற்றி பாகிஸ்தான் யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|