கனடாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் கனடா அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் ஆனது.
பூவா தலையா வென்ற மேற்கிந்திய அணித் தலைவர் கிறிஸ் கெய்ல் முதலில் கனடா அணியை பேட் செய்ய அழைத்தார்.
கனடாவின் புதுப்புயல் ரிஸ்வான் அகமட் சீமா, மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரோம் டெய்லர் மற்றும் போவெல் ஆகியோரை கடுமையாக தாக்கி ஆடினார்.
இவர் ஆடும் வரை அணியின் ரன் வேகத்தை மேற்கிந்திய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. 6.2 ஓவர்களில் கனடா 50 ரன்களை எட்டியது. 14 வது ஓவர் வரை ஆடிய ரிஸ்வான் சீமா 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 மிகப்பெரிய சிக்சர்கள் சகிதம் 61 அதிரடி ரன்களை விளாசினார். அவர் ஆட்டமிழந்தவுடன் கனடா அணி சோபிக்கவில்லை.
179 ரன்களுக்கு சுருண்டது கனடா.
மேற்கிந்திய அணி இலக்கை துரத்திய போது கிறிஸ் கெய்ல் காட்டுத்தனமாக அடித்து ஆடத் துவங்கினார். 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 27.3 ஓவர்களில் 181 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து எடுத்தது மேற்கிந்திய அணி.
ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்லும், தொடர் நாயகனாக அதிரடி கனடா வீரர் ரிஸ்வான் சீமாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
|