பாதுகாப்பு பிரச்சினை எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா மற்றும் நியூஸீலாந்து ஆகிய அணிகள் பங்கேற்க முடியாது என்று கூறியதன் காரணமாக பாகிஸ்தானில் நடக்க இருந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
ஐ.சி.சி.சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் பெரும்பாலான அணிகள் தயக்கம் காட்டின. தென்ஆப்பிரிக்கா போட்டியை விட்டு விலகுவதாக அறிவித்தது. ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து அணிகளும் விலகும் முடிவில் இருந்தன.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) நேற்று தொலைபேசி மாநாட்டின் மூலம் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து, தென்ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தன.
இறுதியில் போட்டியை அடுத்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் வரை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஐ.சி.சி. தலைவர் மோர்கான் தெரிவித்தார்.
`போட்டியை தள்ளிவைப்பது என்பது ஒருமித்த முடிவாகும். இந்த போட்டியை அடுத்த ஆண்டு தொடர்ந்து பாகிஸ்தானில் நடத்த ஒப்புக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த சமயமும் இதே போல் ஏதாவது அணி ஆட்சேபனைகளை தெரிவித்தால், போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐ.சி.சி.க்கு உரிமை உண்டு' என்று மேலும் தெரிவித்தார்.
போட்டி தொடங்க 19 நாட்களே இருந்த நிலையில் ஐ.சி.சி.யின் முடிவுக்கு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் 33 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
|