2006-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய ஓவல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஐ.சி.சி.யால் விளையாடத் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் அப்போதைய அணித்தலைவர் இன்ஸமாம் உல் -ஹக் தனக்கு ஐ.சி.சி. இழப்பீடு அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
ஓவல் டெஸ்டில் எதிர்ப்பு தெரிவித்து அணியை களமிறக்காததால், கிரிக்கெட் ஆட்டத்தின் கவுரவத்திற்கு பங்கம் விளைவித்தார் என்று 4 போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டார் பாகிஸ்தான் அப்போதைய அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக். ஐ.சி.சி. தற்போது, அந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றது என்ற அறிவிப்பை மாற்றி டிரா என்று அறிவித்துள்ளதால், இன்ஸமாம் தனது தடைக்கு ஐ.சி.சி. இழப்பீடு அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
சர்ச்சைக்குறிய இந்த டெஸ்ட் போட்டி 2006-ஆம் ஆண்டு ஓவலில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதம் செய்ததாக ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க மறுத்தனர். இதனால் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. அந்த முடிவையே ஐ.சி.சி. தற்போது மாற்றியுள்ளது.
ஐ.சி.சி.யின் இந்த முடிவு மாற்றத்தை வரவேற்றுள்ள இன்ஸமாம், "முடிவை மாற்றியுள்ளது சரி! எனக்கு இழப்பீடு கொடுக்கப்போவது யார்? 2006-ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபியை என்னால் விளையாட முடியாமல் போயுள்ளதே" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளில் நடுவர் பொறுப்பு வகிப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று இன்ஸமாம் தெரிவித்துள்ளார்.
|