முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா!  Search similar articles
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் - 4 சுற்றில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம் பாகிஸ்தானின் கனவு தகர்ந்தது.

இறுதிப்போட்டிக்குள் நுழைய, கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றமாக இலங்கை அணி ஏற்கனவே இறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் வாஸ், மென்டிஸ் ஆகிய பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக பெர்னாண்டோ, வீரரத்னே இடம் பெற்றனர்.

பூவா தலையா வென்ற இலங்கை கே‌‌ப்ட‌ன் ஜெயவர்த்தனே, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினார்கள். இலங்கை அணி தொடக்க விக்கெட்டை விரைவாக இழந்தது. இந்த தொடரில் 3 சதம் அடித்து அசத்தியுள்ள சங்கக்கரா 7 ரன்கள் (10 பந்து) எடுத்த நிலையில், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகி எழுந்த பவுன்சரை ஹூக் செய்ய முயன்ற சன்கக்காரா தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் கேப்டன் ஜெயவர்த்தனே ஆட வந்தார். தனது வழக்கமான பாணியில் அதிரடி நடத்திய ஜெயசூர்யா, சங்கக்கரா போன்று ஹூக் செய்ய முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 37 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 43 ரன்கள் விளாசினார். இதன் பின்னர் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது.

இருப்பினும் அவர்களது ரன் வேகத்தை இந்திய அணியின் பந்து வீச்சு கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இர்பான் பத்தான் 10 ஓவர்களில் 80 ரன்களை கொடுத்தார். அவரது பந்தில் வேகமும் இல்லை ஸ்விங்கும் இல்லை.

ஜெயவர்த்தனே 50 ரன்களும் (53 பந்து, 4 பவுண்டரி), கபுகேதரா 75 ரன்களும் (78 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தி‌ல்ஷான் 15 ரன்களும், சமர சில்வா 50 ரன்களும் (56 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வீரரத்னே 23 ரன்னும் (18 பந்து) எடுத்து அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தனர். இறுதிக்கட்டத்தில் மிராண்டோவின் அதிரடியால் (23 ரன், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) இலங்கை அணி 300 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்தது. பேட்டிங் விளாசலுக்குத் தகுந்த மட்டை ஆட்டக்களத்தில் கம்பீரும், சேவாகும் மிரட்டலான தொடக்கத்தை அளித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.

சேவாக் 42 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். நாலாபக்கமும் பவுண்டரிகளை ஓட விட்டு அரை சதத்தை கடந்த கம்பீர் 68 ரன்களில் (61 பந்து, 11 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதை தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரெய்னா-கேப்டன் தோனி ஆகியோர் ரன்-ரேட்டை சீரான விகிதத்தில் கொண்டு வந்து, வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

தேவையில்லாமல் 3-வது ரன் எடுக்க ஓடி ரெய்னா (54 ரன், 66 பந்து, 3 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கேப்டன் தோனி (67 ரன், 62 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார்.

இதன் பின்னர் யுவராஜ்சிங், ரோகித் ஷர்மா ஆகியோர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். யுவராஜ்சிங் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யுவராஜ்சிங் 36 ரன்னுடனும் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் ஷர்மா 22 ரன்னுடனும் (28 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக எம்.எஸ்.தோனி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு (6 புள்ளி) முன்னேறியது. இறுதிப்போட்டி கனவில் இருந்த பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது.

சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசத்தை வென்றாலும் பயன் இல்லை.

இறுதிப்போட்டி வருகிற 6ஆ‌ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மீண்டும் சந்திக்க உள்ளன.
மேலும்
பயிற்சியாளர் கர்ஸ்டனுக்கு பி.சி.சி.ஐ. எச்சரிக்கை!
இல‌ங்கை முத‌லி‌ல் பே‌ட்டி‌ங்!
இந்தியாவுக்கு இ‌ன்று வாழ்வா? சாவா? இல‌ங்கையுட‌ன் மோதல்!
யூனுஸ் கான் சதம்: பாகிஸ்தான் அபார வெற்றி!
தோனி, ரோஹித் அதிரடி! இந்தியா 308 / 7 விக்.
மாலிக் இல்லை! இந்தியா பேட்டிங்!