வாழ்வா சாவா என்ற முடிவில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-4 சுற்றில் இதுவரை 4 ஆட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் இலங்கை அணி, பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளியுடன் (இதில் முதல் சுற்றில் கிடைத்த 2 போனஸ் புள்ளியும் உண்டு) இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
சூப்பர்-4 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா, பாகிஸ்தானிடம் நேற்று வீழ்ந்தது. இந்தியா 4 புள்ளியுடன் (2 போனஸ் புள்ளியும் சேர்த்து) 2-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 2 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. புள்ளி எதுவும் பெறாத வங்கதேசம் இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. சூப்பர்-4 சுற்றில் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன.
இதில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இது இந்தியாவுக்கு வாழ்வா? சாவா போட்டியாகும். இதில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இந்த போட்டியை சாதாரணமாக கருதாமல் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் சீரியசாக விளையாடுவோம் என்று இலங்கை பயிற்சியாளர் பெய்லிசிஸ் கூறியுள்ளார்.
இலங்கையுடன் இந்தியா தோல்வி அடைந்து, நாளை நடக்கும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளியுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டி அணி தேர்வாகும்.
|