ஆசியக் கோப்பை சூப்பர்- 4 போட்டிகளில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
50 ஓவர்களில் 309 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் துவக்க வீரர்கள் சல்மான் பட் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோர் 8 ஓவர்களில் 65 ரன்களைக் குவித்து அபாரமான துவக்கத்தை அளித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சு மட்டையான ஆட்டக்களத்தில் மைதானத்தின் நாலாபுறமும் சிதற அடிக்கப்பட்டது. சல்மான் பட் 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். மற்றொரு வீரர் நஸீர் ஜாம்ஷெட் 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த வேளையில் காலில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று. பாகிஸ்தான் 121/1.
மொகமது யூசுஃப் 21 ரன்களில் சாவ்லா பந்தில் பவுல்டு ஆனார். பாகிஸ்தான் 165/2.
அதன் பிறகு யூனுஸ் கான், அணித் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் அபாரமாக அதிரடி ஆட்டம் ஆடி 45.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்து வெற்றி தேடித் தந்தனர்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற யூனுஸ் கான் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 117 பந்துகளில் 123 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மிஸ்பா உல் ஹக் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்று இலங்கையுடன் நடைபெறும் போட்டியில் இந்தியா தோல்வி தழுவினால், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி முடிவை எதிர் நோக்கி காத்திருக்கவேண்டும்.
இந்தியா வெற்றி பெற்றால் இறுதிக்குள் நுழையும். தோற்று விட்டால் இந்தியா 4 புள்ளிகளுடன் இருக்கும். பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினால் அந்த அணியும் 4 புள்ளிகள் பெறும். இந்த நிலையில் நிகர ரன் விகித அடிப்படையில் மட்டுமே இறுதிக்கு தகுதி பெறும் அணி தீர்மானிக்கப்படும்.
எனவே இன்றைய போட்டி இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
|