சேவாக், கம்பீர் அதிரடியாக ஆடி கொடுத்த அருமையான துவக்கத்தினாலும், இறுதி கட்டத்தில் தோனி, ரோஹித் சர்மா, இர்ஃபான் பத்தான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினாலும் வலிமையான எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளது.
பாக்கிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், கராச்சியில் இன்று நடைபெறும் இறுதிச் சுழல் சுற்றுப் போட்டியில் பூவா-தலையா வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்துள்ளது.
துவக்க ஆட்டக்கார்ரர்கள் சேவாக்கும், கம்பீரும் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆடத் துவங்கினர். வீரேந்திர சேவாக் 33 பந்துகளில் 6 பெளண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 49 ரன்கள் எடுத்தார். கம்பீர் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் முதல் 10.3 ஓவர்களில் 88 ரன்களை எடுத்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. சுரேஸ் ரெய்னா 1 ரன்னிற்கும், யுவராஜ் சிங் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இணை சேர்ந்த அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியும், ரோஹித் சர்மாவும் மிகச் சிறப்பாக ஆடினர். ரோஹித் 71 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டிற்கு 112 ரன்களைக் குவித்தனர்.
இர்ஃபான் பத்தானுடன் இணைந்து தோனி சிறப்பாக ஆடினர். பத்தான் ஆரம்பத்திலிருந்தே வேகமாக ஆடி ரன்களைக் குவித்தார். தோனி 96 பந்துகள் விளையாடி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பத்தான் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினார். பாக்கிஸ்தான் அணியின் இடது கை பந்து வீச்சாளர் இஃப்திகார் அன்ஜூம் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
|