சேவாக், சுரேஷ் ரெய்னா அதிரடியில் பாகிஸ்தான் நிலை குலைந்தது. ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை நேற்று இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கராச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களைக் குவித்தது. இந்தியா 42.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் விளாசியது.
சல்மான் பட், ஷோயப் மாலிக் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களைச் சேர்த்தது. சல்மான் பட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து மாலிக்குடன் இணைந்தார் யூனிஸ் கான். இந்த ஜோடியின் ஆட்டம் அணியின் எண்ணிக்கையை கிடுகிடுவென உயர்த்தியது.
125 ரன்களைச் சேர்த்திருந்தபோது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார் மாலிக். யூனிஸ் கான் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தியத் தரப்பில் 6 வீரர்கள் பந்துவீசினர்.
ஆனால் ஆர்.பி.சிங் மட்டுமே குறைவான ரன்களைக் கொடுத்தார். இவர் 10 ஓவர்கள் வீசி 44 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்த போது கம்பீர் (9) மிஸ்பா உல் ஹக்கின் அபாரமான கேட்சிற்கு பலியானார். ஆனால் உமர் குல் காயமடைந்து 2-வது ஓவரில் வெளியேறியதால் பாகிஸ்தானுக்கு பந்து வீச்சில் பெரிய இழப்பு ஏற்பட்டது.
சேவாக்- ரெய்னா ஜோடி அபாரமாக விளையாடி 24.4 ஓவர்களில் 198 ரன்களை சேர்த்தனர்.
சேவாக் 95 பந்துகளில் 5 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 119 ரன்களும், சுரேஷ் ரெய்னா 69 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் குவித்தனர்.
இவர்கள் ஆட்டமிழந்த பிறகும் யுவ்ராஜ்சிங் மூலம் அதிரடி தொடர்ந்தது. இவர் 47 பந்துகளில் 1பவுண்டரி 3 மிகப்பெரிய சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். தோனியும் இவரும் 10 ஓவர்களில் 63 ரன்களைச்சேர்த்தனர்.
தோனி 42.1வது ஓவரில் யூனுஸ் கான் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கி வெற்றி இலக்கை எட்டினார்.
சுருக்கமான ஸ்கோர்
பாகிஸ்தான்: 50 ஓவர்களில் 299 - 4 (ஷோயப் மாலிக் 125 ஓய்வு, யூனிஸ் கான் 59, சல்மான் பட் 35, மிஸ்பா உல் ஹக் 31 நாட் அவுட், ஆர்.பி. சிங் 1- 44).
இந்தியா: 42.1 ஓவர்களில் 301- 4 (சேவாக் 119, ரெய்னா 84, யுவராஜ் சிங் 48, அஞ்சும் 2- 61).
|