1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கபில் தலைமையிலான இந்திய அணி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளி விழா கொண்டாடி அன்றைய தினத்தை மீண்டும் நினைவு கூர்ந்தனர்.
ஆட்டக்களத்திற்கு வெற்றி வீரர்கள் நடந்து வந்து 1983 உலகக் கோப்பை வெற்றி தினத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து மலரும் நினைவுகளில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு 25 ஆண்டுகளுக்கு முன் அன்றைய வெற்றி தினத்தில் செய்தது போலவே அதே இடத்தில் நின்று கொண்டு கபில் தேவ் -ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்தார்.
பிறகு வீரர்களும் பங்கேற்பாளர்களும் இரவு விருந்து எடுத்துக்கொண்டனர். அழைப்பின் பேரில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் ஷரத் பவார் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா 1983 உலகக் கோப்பை போலவே வடிவமைக்கப்பட்ட கோப்பையை 15 வீரர்களுக்கும் பரிசாக அளித்தனர்.
பிறகு 25 காரட் வைரங்கள் பதிக்கப்பட்ட அலங்கார கிரிக்கெட் பேட், அதேபோல் வைரங்கள் ஜொலிக்கும் கிரிக்கெட் பந்து ஆகியவற்றை விஜய் மல்லையா அறிமுகம் செய்தார். இந்த சிறப்புப் பந்து மற்றும் பேட் ஏலம் விடப்பட்டு அந்த தொகை உலகக் கோப்பை நாயகர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட் வீரர்களை கவுரவித்ததற்காக ஷரத் பவாருக்கு கபில் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். பவார் பேசுகையில், இங்கிலாந்து சென்று இந்திய அணி 1932 ஆம் ஆண்டு விளையாடியிருந்தாலும் 1983-ஆம் ஆண்டு கபிலும் அவரது அணியினரும் வரலாறு படைத்துள்ளனர் என்றும் இந்த வெற்றியினால்தான் இன்று இந்திய கிரிக்கெட் அடைந்துள்ள உயர்வு நிலை சாத்தியமாகியுள்ளது என்றும் கூறினார்.
|