ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான 4-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ரன் எண்ணிக்கையான 245 ரன்களை துரத்திய நியூஸீலாந்து கடைசி பந்தில் வெற்றியை ஈட்டியது.
இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2- 1 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்ய வெட்டோரியால் பணிக்கப்பட்ட இங்கிலாந்து இயான் பெல், லூக் ரைட் மூலம் சுமாரான துவக்கத்தை பெற்றது. இயன் பெல் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உடனடியாக கெவின் பீட்டர்சன் ரன் எதுவும் எடுக்காமல் மார்க் கில்லெஸ்பி பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு காலிங்வுட்டும் ஆட்டமிழக்க 22-வது ஓவரில் இங்கிலாந்து 101/4 என்று சரியும் அபாயம் ஏற்பட்டது.
ஆனால் ரவி பொபாரா மற்றும் ஓஏ.ஷா இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 75 ரன்களை சேர்த்தனர். பொபாரா 58 ரன்களையும், ஷா 63 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து கடைசி ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூஸீலாந்து தரப்பில் இளம் வீச்சாளர் சௌதீ 3 விக்கெட்டுகளையும், மில்ஸ், கில்லெஸ்பி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
246 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய நியூஸீலாந்து அணி ஜேமி ஹவ்(37) ஸ்காட் ஸ்டைரிஸ் (69) ஓரம் (38) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 35 ஓவர்களில் 173/4 என்று வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் ஸ்டைரிஸை ஸ்வான்/காலிங்வுட் கூட்டணி அபாரமாக ரன் அவுட் செய்ய, ஓரம், டேனியல் வெட்டோரி, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
39-வது ஓவரில் 189/7 என்று ஆனது நியூஸீலாந்து. அப்போது நியூஸீலாந்து வீரர் எலியட் 24 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்தார். நியூஸீ. அணிக்கு தேவை 26 ரன்கள் இன்னமும் 39 பந்துகள் இருந்தன.
அப்போது கைல் மில்ஸ் ஒரு அதிவேக சிங்கிளிற்காக எலியட்டை அழைக்க அவரும் ஓடி வந்தார், சைட்பாட்டத்துடன் மோதி கீழே விழுந்தார் எலியட். ஆனால் பந்தை பெல் ரன்னர் முனையில் இருந்த பீட்டர்சனுக்கு அனுப்ப அவர் ரன் அவுட் செய்தார்.
நடுவர் மார்க் பென்சன், இங்கிலாந்து தன் முறையீட்டை வாபஸ் பெற நேரம் கொடுத்தும் "ஜென்டில்மேன்" இங்கிலாந்து வீரர்கள் முறையீட்டை வாபஸ் பெறவில்லை. எலியட் பெவிலியன் திரும்பினார்.
21 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது, ஆல்ரவுண்டர் சௌதீ ரன் அவுட் ஆனார். அதன் பிறகு 47 வது ஓவரை மார்க் கில்லெஸ்பி ரன் எடுக்க முடியாமல் மெய்டன் ஆக்கினார். அதாவது 9 பந்துகளுக்கு ரன் எதையும் நியூஸீ.யால் எடுக்க முடியவில்லை
ஆனால் கைல் மில்ஸ், காலிங்வுட் பந்தை மிகப்பெரிய சிக்சருக்கு விரட்டினார். 9 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்று ஆனது. அதன் பிறகு தாறுமாறாக சிங்கிள் எடுத்தனர் மில்சும், கில்லெஸ்பியும்.
கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை. லூக் ரைட் வீசிய முதல் பந்தில் மில்ஸ் சிங்கிள் எடுத்தார். அதற்கு அடுத்த 4 பந்துகளை மார்க் கில்லெஸ்பி தொட முடியவில்லை. கடைசி பந்தை எப்படியோ கவர் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் எடுத்தார் கில்லெஸ்பி, ஆட்டம் சமன் ஆகியிருக்கவேண்டியதுதான். ஆனால் கவர் திசை ஃபீல்டர் ஸ்வான் ரன் அவுட் செய்யும் ஆசையில் த்ரோ செய்ய பந்து ஸ்டம்பில் படாமல் தாண்டிச் சென்றது 2-வது ரன்னை நியூஸீ வீரர்கள் ஓடி அபாரமான வெற்றியை ஈட்டினர்.
ஆட்ட நாயகனாக ஸ்காட் ஸ்டைரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
|