பாகிஸ்தானில் நேற்று நடந்த லீக் போட்டியில் வங்கதேச அணியை 131 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் இலங்கை- வங்க தேச அணிகள் மோதியது.
பூவா தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதன்படி தொடக்க வீரர்களாக சனத் ஜெயசூர்யாவும், சங்கக்காராவும் களம் இறங்கினர். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடிய ஜெயசூர்யா, இந்த போட்டியில் அபாரமாக விளையாடினார். 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் அடங்கும்.
மற்றொரு தொடக்க வீரர் சங்கக்காரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 16 பவுண்டரிகள் விளாசி 101 ரன்கள் குவித்தார்.
4வது விக்கெட்டுக்கு விளையாடிய கபுகேரா, வங்கதேச பந்துகளை சிதறடித்தார். இவர் 67 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் வந்த வீரர்கள் யாரும் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
வங்க தேச தரப்பில் அப்துல் ரசாக் 3 விக்கெட் வீழ்த்தினார். மோர்ட்சா, ஹூசைன் தலா 2 விக்கெட்டும், கபாலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால எண்ணிக்கையுடன் வங்கதேச அணி களம் இறங்கியது. இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் ரகீம் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு விளையாட வில்லை.
இலங்கை தரப்பில் முரளிதரன் 2 விக்கெட்டை வீழ்த்தினார். வாஸ், ஜெயசூர்யா, குலசேகரா, சில்வா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|