ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 256 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
375 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங் அணி, 36.5 ஓவர்களில் 118 ரன்களுக்குச் சுருண்டு படு தோல்வி தழுவியது.
இந்தியத் தரப்பில் பியூஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளும், சேவாக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தொடக்கத்திலிருந்தே ஹான்காங் அணி உயர் மட்ட பந்து வீச்சிற்கு தயாராகாத அணி என்பது தெரிய வந்தது. வரிசையாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
முன்னதாக இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களைக் குவித்தது.
பூவா தலையா வென்ற இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
கம்பீர்- சேவாக் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கி, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. ஹாங்காங் வீரர்களின் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் வீசும் பந்து வீச்சாளர்களை விளாசுவது போல் கம்பீரும் சேவாகும் விளாசித் தள்ளினர்.
அணியின் எண்ணிக்கை 127 ஆக இருந்தபோது அதிரடியாக ஆடிய சேவாக் ஆட்டமிழந்தார். இவர், 44 பந்துகளில் 78 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸரும், 12 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்த சில நிமிடங்களில் கம்பீர் 51 ரன்களுடன் வெளியேறினார்.
தொடக்க ஜோடிக்கு அடுத்தபடியாக, சுரேஷ் ரெய்னா- தோனி ஜோடியின் ஆட்டம் எண்ணிக்கை உயர்வுக்கு மேலும் வித்திட்டது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 166 ரன்களைக் குவித்து, ஆசிய கோப்பை போட்டியில் புதிய சாதனை படைத்தது.
ரெய்னா 66 பந்துகளில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். குறைவான பந்துகளில் விரைவாக சதம் எட்டிய இந்திய வீரர்கள் வரிசையில் 2-ம் இடத்தைப் பிடித்தார் அவர்.
அவரைத் தொடர்ந்து தலைவர் தோனி சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு இது 4-வது சதமாக அமைந்தது.
ராய்னா 101 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். தோனி 109 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்காக 96 பந்துகளை எதிர்கொண்டார்.
இன்றைய முக்கியப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
|