ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூவா தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சல்மான் பட், கேப்டன் சோயிப் மாலிக் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே சல்மான்பட் வெளியேறினார்.
இதன் பின்னர் மாலிக் (35 ரன்), முகமது யூசுஃப் (28 ரன்) ஆகியோரின் விக்கெட்டை சீரான இடைவெளியில் இழந்த பாகிஸ்தான், சுழற்பந்து வீச்சாளர் நதீம் அகமது பந்து வீச்சில் நெருக்கடிக்குள்ளானது.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த யூனுஸ்கான் 67 ரன்னிலும் (65 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), அதை தொடர்ந்து மிஸ்பா உல்ஹக் (2 ரன்), அப்ரிடி (4 ரன்), விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் (7 ரன்) ஆகியோர் வரிசையாக பெவிலியன் திரும்பினார்கள்.
161 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் சரியும் அபாயத்தில் இருந்தது.
பிறகு 8-வது விக்கெட்டுக்கு இணைந்த ஃபவாத் ஆலம், சோகைல் தன்விர் இரண்டு பேரும் அணியை சரிவில் இருந்து மீட்டு ஸ்கோரை உயர்த்தினர். 100 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி அணியின் ஸ்கோருக்கு வலு சேர்த்தது. தனது முதலாவது அரை சதத்தை நிறைவு செய்த தன்விர் 59 ரன்களில் (55 பந்து) ஆட்டம் இழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. பவாட் ஆலம் 63 ரன்னுடன் (77 பந்து) கடைசி வரை களத்தில் இருந்தார். ஹாங்காங் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நதீம் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 289 ரன்கள் இலக்குடன் ஹாங்காங் அணி விளையாடியது. 37.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஹாங்காங் அணி 133 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் தன்விர், இப்திகர் அஞ்சும், அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும்,ஃபவாத் ஆலம், யூனுஸ்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். தன்விர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கிடைத்தன.
|