துவக்க ஆட்டக்காரர்கள் வித்யூத் சிவராமகிருஷ்ணன், இயன் ஃபிளமிங் ஆகியோர் அளித்த அபார துவக்கமும், தோனி, மார்க்கல், கோனி ஆகியோரின் அதிரடி ஆட்டமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது வெற்றியை பெற்றுத்தந்தன.
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில், டெல்லியில் இன்று மாலை நடந்த முக்கியப் போட்டியில் பூவா - தலையா வென்ற சென்னை அணி, டெல்லி டேர் டெவில்ஸை முதலில் களமிறக்கியது.
கெளதம் கம்பீரும் சேவாக்கும் 5 ஓவரில் 45 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தைத் தந்தனர். சேவாக் 18 பந்துகளில் 23 ரனகள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஆடவந்த வில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இணை சேர்ந்த கெளதம் கம்பீரும், தவானும் திறமையாக அடித்தாடி ரன்களைக் குவித்தனர்.
கம்பீர் 49 பந்துகளில் 11 பெளண்டரிகளுடனும், ஒரு சிக்கஸருடனும் 80 ரன்கள் குவித்தார். தவான் 46 பந்துகளில் 6 பெளண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 59 ரன்களைக் குவித்தார்.
இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டிற்கு 12.4 ஓவர்களில் 121 ரன்களைக் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைக் குவித்தது டெல்லி டேர் டெவில்ஸ்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வித்யூத் சிவராமகிருஷ்ணனின் அதிரடி ஆட்டத்தால் 6.1 ஓவர்களில் 62 ரன்களைக் குவித்தது. வித்யூத் 23 பந்துகளில் 7 பெளண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஆடிய ஸ்டீபன் ஃபிளமிங், 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பெளண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். ஒரு ரன்னிற்கு ரெய்னா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆடவந்த மார்க்கல் 15 பந்துகளில் 2 பெளண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் விளாசி எடுத்த 30 ரன்களாலும், தோனியின் 33 ரன்களாலும் இலக்கை நெருங்கியது.
ஆனால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் திணறிய சென்னை அணியை பதற்றமின்றி விளையாடி வெற்றிக்கு கொண்டு சென்றார் இளம் வீரர் கோனி. ஐந்தே பந்துகளில் 13 ரன்கள் எடுத்த கோனி, கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்ட உதவினார். அருமையான ஆட்டம்.
சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
|