ஐ.சி.சி. கிரிக்கெட் குழு, நடுவர் தீர்ப்புகளை மேலும் திறம்படச் செய்வதற்கும், துல்லியத்தை கடைபிடிப்பதற்கும் சில புதிய முறைகளை பரிந்துரை செய்துள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் இரண்டு நாள் கூட்டத்தில் சில முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
அதாவது ஒவ்வொரு இன்னிங்சிலும் ஒரு அணி 3 முறை நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரலாம்.
முதல் கள நடுவர் தனது தீர்ப்பை வழங்குவார்; ஆனால் தான் அவுட் இல்லை என்று பேட்ஸ்மென் கருதினாலோ, அதேபோல் தவறாக நாட் அவுட் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினாலோ நடுவரிடம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரலாம். பிறகு கள நடுவர்களும், 3ஆவது நடுவரும் கலந்தாலோசிப்பார்கள். இறுதித் தீர்ப்பை கள நடுவரே வழங்குவார்.
மேலும் நாளுக்கு நாள் சர்ச்சைகுரியதாக மாறி வரும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்பையும் தொழில் நுட்ப உதவியுடன் தீர்க்கவும் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹாக்-ஐ தொழில் நுட்பம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த உள்ளது. அதாவது வீசப்பட்ட பந்து பேட்ஸ்மெனை வந்தடைந்து எங்கு படுகிறதோ அது வரையில் மட்டும்தான் 3ஆவது நடுவர் ஹாக்-ஐ தொழில் நுட்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பந்து பேட்ஸ்மேனை தாண்டிய பிறகு ஹாக்-ஐ கொடுக்கும் கணிப்புகளை 3ஆவது நடுவர் ஏற்கக் கூடாது.
இதிலும் கள நடுவரே இறுதித் தீர்ப்பை வழங்குவார்.
இதுபோன்ற புதுமைகளை ஐ.சி.சி. கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை தலைமை செயற்குழு ஏற்றபிறகு டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்த புதிய விதிமுறைகள் பரிசோதிக்கப்படும்.
|