சிறிசாந்தை அறைந்த விவகாரத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்ட ஹர்பஜன் சிங் மேலும் தன் மீது நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மன்றாடி வருகிறார்.
வழக்கறிஞர் நானாவதி தனியாக விசாரித்து வரும் இந்த விவகாரம் இவர் அறிக்கை சமர்ப்பித்த பின்பு மீண்டும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. ஐ.சி.சி. வீரர்கள் ஒழுக்கவிதிகளின் படி இவர் மேலும் தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மேல் கடிதமாக எழுதி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலுக்காக செய்தியாளர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நிரஞ்சன் ஷாவை அணுகியபோது, ஹர்பஜன் நிறைய கடிதங்கள் எழுதி வருகிறார் என்றும் தற்போது விசாரணையில் இருப்பதால் கடிதத்தின் உள்ளடக்கங்களை தான் வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன் தான் திருந்துவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கேட்டு ஹர்பஜன் மன்றாடுவதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|