கராச்சி: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் மேல்முறையீடு மீதான விசாரணை இன்று துவங்குகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியச் செயல்பாடுகள் மீது வெளிப்படையான விமர்சனம் வைத்ததாகவும், அணியின் சக வீரர் மொஹமத் ஆசிஃபை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஷோயப் அக்தருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் தடை விதித்தது.
இந்த தடை குறித்து அக்தர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தீர்ப்பாயம் மறுபரீசிலனை செய்ய நியமிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி அஃப்டாப் ஃபரூக் இது குறித்து கூறுகையில் அக்தர் தரப்பு வழக்கறிஞர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை முன் வைப்பார்கள். இதனை கேட்டறிந்த பிறகு தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறியதோடு, இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
மேலும் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில் விசாரணை நடைமுறைகள் காமிராவில் பதிவு செய்யப்படலாம் என்று கூறியுள்ளார் நீதிபதி ஃபரூக்.
|