சென்னையில் சற்றுமுன் நடந்து முடிந்த ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லம், அதிரடியாக ஆட்டத்தை துவக்கினார். முதல் 2.2 ஓவர்களிலேயே 32 ரன்களை எட்டியது கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி.
ஓரம் வீசி ஒரே ஓவரில் மெக்கல்லமும், பாண்ட்டிங்கும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து நைட் ரைடர்ஸ் அணி சரியத் தொடங்கியது. அதன்பிறகு அந்த அணியின் வீரர்கள் யாரும் நிலைத்து நின்றாடவில்லை. சாஹா 27 ரன்களும், சுக்லா 42 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. ஓரம் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஹெய்டனும், பார்தீவ் பட்டேலும் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8.2 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 66 ரன்களை எட்டியிருந்த நிலையில், 27 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் பட்டேல் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஹெய்டனுடன் தோனி இணை சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி 17 ஓவர்களில் 152 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டினர்.
48 பந்துகளில் 6 பெளண்டரிகளுடனும், 3 சிக்ஸர்களுடனும் 70 ரன்கள் எடுத்தார் ஹெய்டன். மறுமுனையில் 27 பந்துகளில் 3 பெளண்டரிகளடனும், 2 சிக்ஸர்களுடனும் 43 ரன்கள் எடுத்தார் தோனி.
|