அம்லாவின் அபார ஆட்டத்தாலும் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 456 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி வலுவான தொடக்கத்தை கொடுத்தது. அணித் தலைவர் ஸ்மித்- மெக்கன்சி இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தனர்.
73 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், கும்ளே பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் மெக்கன்சியுடன் அம்லா இணை சேர்ந்து விளையாடினார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கை விறுவிறு என்று உயர்த்தினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெக்கன்சி, 94 ரன்னில் அவுட்டானார். இவரது விக்கெட்டை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து அம்லாவுடன் இணை சேர்ந்த காலீஸ் சிறிது நேரம் கூட நிலைக்க வில்லை. 13 ரன் எடுத்த காலீஸ், ஹர்பஜன் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அம்லா நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் வந்த பிரின்ஸ் 23 ரன் எடுத்திருந்தபோது கும்ளே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது அம்லா 85 ரன்னுடனும், டிவிலியர்ஸ் 10 ரன்களுடனும் விளையாடி வந்தனர்.
இன்று 2வது ஆட்டத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அம்லா சதம் அடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டிவிலியர்ஸ் 44 ரன்னில் இருந்தபோது சிறிசாந்த் பந்தில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.
6வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பவுச்சர் அம்லாவுடன் இணை சேர்ந்து விளையாடி வருகிறார். அம்லா 124 ரன்னுடனும், பவுச்சர் 26 ரன்னுடனும் உணவு இடைவேளை வரை எடுத்திருந்தனர்.
தற்போது உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அம்லா 150 ரன் எடுத்தார். இவருக்கு பவுச்சர் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். 158 ரன்கள் எடுத்திருந்த அம்லா ரன் அவுட்டானார். இவரை சிறிசாந்த் ஆட்டம் இழக்க செய்தார்.
பின்னர் களம் இறங்கிய மோர்கல், பவுச்சருடன் இணைந்து விளையாடி வருகிறார். பவுச்சர் 43 ரன்னிலும் மோர்கல் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 456 ரன்கள் எடுத்துள்ளது.
|