மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இதுவாகும்.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வந்தது. பூவா தலையா வென்று முதலில் இலங்கை அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது.
அணித் தலைவர் ஜெயவர்தனே 136 ரன்கள் குவித்தார். வார்ணபுரா அபாரமாக விளையாடி 120 ரன் எடுத்தார்.
மேற்கிந்திய வீரர் டெய்லர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 280 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. சர்வண் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லும் அளவுக்கு விளையாட வில்லை.
196 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி தனது 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
பின்னர் 437 ரன்களை வெற்றி இலக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயித்தது இலங்கை அணி. தொடக்க வீரர் ஸ்மித் 10 ரன்னில் வாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராவ் 83 ரன்னில் வீழ்ந்தார்.
சர்வண் தன் பங்குக்கு 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் கெய்ல் 51 ரன்னுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இலங்கை பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் மேற்கிந்தி அணி 315 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
இலங்கை தரப்பில் சமிந்தா வாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முரளிதரன் 3 விக்கெட்டும், மிரண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
|