3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அந்த அணியின் பீட்டர்சன் அபாரமாக விளையாடி 129 ரன்கள் குவித்தார்.
நியூஸீலாந்து அணி வீரர் சவுத்ரி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூஸீலாந்து அணி 168 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் பிளமிங் மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் சைட்பாட்டன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 85 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிய இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 467 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதையடுத்து நியூஸீலாந்து அணிக்கு 552 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து வீரர்கள் ஸ்ட்ராஸ் (177), பெல் (110) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் எடுத்தனர்.
4வது நாளான நேற்று நியூஸீலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்திருந்து. இன்று கடைசி ஆட்டத்தின் போது நியூஸீலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். அந்த அணியின் டெய்லர் அருமையாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார்.
டெய்லர்- மெக்குல்லம் இணை சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தனர். 42 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்குல்லம் ஆட்டம் இழந்தார். அணித்தலைவர் வெட்டோரி 43 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு மார்டினும், சவுத்ரியும் இணை சேர்ந்து 84 ரன்கள் குவித்தனர். சவுத்ரி அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் 9 சிக்சர், 4 பெளண்டரிகள் அடங்கும்.
இருந்தாலும் கடைசிவரை போராடிய நியூஸீலாந்து அணி தோல்வியை தழுவியது. அனைத்து விக்கெட்டுகளை இழந்து 431 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூஸீலாந்து அணி. இதனால் இங்கிலாந்து அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து வீரர்கள் பனிசர் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
தொடர் நாயகன், ஆட்ட நாயகன் ஆகிய விருதுகளை தட்டிச் சென்றார் சைட்பாட்டம்.
|