ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலக சாம்பியனை அதன் சொந்த மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கம்பீரமாகத் துவக்க காத்திருக்கிறது.
இந்தியா- தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், நாளை காலை 9.30 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காட்டும் புது உத்வேகமும், தன்னம்பிக்கையும் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
தென் ஆப்பிரிக்க அணியை அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது என்று இந்திய அணித் தலைவர் கும்ளே கூறியுள்ளார். இதற்கு அச்சானியாக, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு 'தனி வியூகம்' வகுத்திருப்பதாக தெ.ஆ. அணித் தலைவர் ஸ்மித் கூறியுள்ளார். இது அந்த அணி இந்திய வீரர்கள் மீது வைத்திருக்கும் பயத்தை காட்டினாலும், வெற்றிக்களிப்பில் உள்ள இந்திய வீரர்களை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.
இதுகுறித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் அனில் கும்ளே கூறுகையில், "ஆஸ்ட்ரேலியாவில் வெளிப்படுத்தியது போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடருவோம். டெஸ்ட் போட்டிகளில் இந்த போட்டி அதற்கு ஒரு துவக்கமாக அமையும். நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
இந்திய அணி சச்சின், கங்குலி, திராவிட், வீரேந்திர சேவாக் உட்பட 7 பேட்ஸ்மேன்கள், நான்கு பந்து வீச்சாளர்களுடன் தனது சொந்த மண்ணில் களமிறங்க உள்ளது.
"இந்த போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றபோதிலும், இரண்டு வேகப் பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்த அனுபவமிக்க வீரர்களும் இடம்பெறுவார்கள்" என்றும் கும்ளே கூறியுள்ளார்.
சென்னையில் நிலவும் நிலையற்ற வானிலைதான் தற்போது இப்போட்டிக்கு இடையூறாக அமையலாம் என்ற அச்சம் உள்ளது. இதற்காக சிதம்பரம் மைதானம் மழைப் பாதுகாப்பு, தண்ணீர் வெளியேற்ற அமைப்புகள் சீராக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஓரிரு நாட்களாக வெளிச்சமும் குறைவாகவே உள்ளது.
|