தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, டெக்கான் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கி ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில்கிறிஸ்ட் 2ஆவது பந்திலேயே கும்ளே பந்தில் போல்டு ஆகி வெளியேறி விட, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கிப்ஸ் 53 ரன் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 33 ரன்னும், ரோஹித் சர்மா 24 ரன்னும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன் குவித்தது.
பெங்களூரு அணியின் கேப்டன் அனில் கும்ளே 4 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 16 ரன்களையே கொடுத்தார். வினய் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
144 ரன் என்ற எளிதான வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் கடுமையாகப் போராடி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. வான் டெர் மெர்வ் மட்டுமே சிறப்பாக விளையாடி 32 ரன் சேர்த்தார். டெய்லர் 27 ரன் சேர்த்தார். முந்தைய 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடியா மனிஷ் பாண்டே நேற்று 4 ரன்களுடன் வெளியேறியதும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
பிரக்யான் ஓஜா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். சைமண்ட்ஸ், ஹர்மித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ், ஆர்.பி. சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனால் 6 ரன் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிபெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது.
நேற்றைய போட்டியின் நாயகனாக அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டித் தொடரின் நாயகனாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கில் கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|