தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ஷாருக்கானின் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியில் இந்திய வீரர்களுக்கு எதிராக நிறவெறி அணுகுமுறை கடைபிடிக்கப் படுவதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் அயல் நாட்டு பயிற்சியாளர்கள் குழுவின் தலைவர் இந்திய வீரர் ஒருவருக்கு எதிராக நிறவெறி மொழியை பயன்படுத்தியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
"வலைப்பதிவாளர் ஒருவர் இதை வெளியிடத் தேவையில்லை" என்று அவர் ஃபேக் ஐ.பி.எல். பிளேயர் என்ற வலைப்பதிவுத் தளத்தை குறிப்பிட்டு கூறுகையில் "இந்த அணியில் இந்திய வீரர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பது உறுதியான தகவல்தான்" என்று ஜடேஜா ஒரு செய்தி நிகழ்ச்சியில் உறுதிபடக் கூறினார்.
இது குறித்து நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்ட ஜடேஜா, ஒரு ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஒருவரை களத்திலிருந்து வருமாறு கூறப்பட்டது, அவரும் பெவிலியன் வந்து தன்னை எதற்கு வரச் சொன்னீர்கள் என்று கேட்டிருக்கிறார், அதற்கு கொல்கட்டா பயிற்சியாளர்களுல் ஒருவர் 'இந்தியனான நீ, நான் கூறுவதை மட்டும் செய்யவும்' என்று கூறியதாக தனக்கு தெரியவந்துள்ளது என்று கூறினார் ஜடேஜா.
இதனால் அந்த அணியில் பிளவும் பாரபட்சமும் கொடிகட்டி பறக்கிறது, நான் கூறுவது முற்றிலும் உண்மையே, வீரர்கள் அங்கு சௌகரியமாக உணரவில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார் ஜடேஜா.
ஆனால் ஜடேஜா இந்த செய்தியை கூற ஒரு வலைப்பதிவாளர் தேவையில்லை, வீரர் ஒருவரே தன்னிடம் கூறியதாக கூறினாலும், இந்த செய்தி வெளியிடப்பட்ட அந்த வலைப் பதிவின் உண்மைத் தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை. |