சிட்னியில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி "எப்போதும் நாளை என்ற ஒன்று உள்ளது" என்று கூறியுள்ளார்.
டாஸ் வென்று ஃபீல்டிங் எடுத்தது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார் தோனி. "இரண்டாவதாக விளையாடும்போது பிட்ச் மோசமாக நடந்து கொண்டது" என்றார் தோனி.
"எப்போதும் நாளை என்ற ஒன்று உள்ளது, பேட்டிங்கில் நாங்கள் நன்றாகத் துவங்கினோம் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேத்யூ வேட் ஆஸ்ட்ரேலியாவுக்காக பிரமாதமாக விளையாடினார்." என்றார் தோனி.
எப்போதும் நாளை என்ற ஒன்று உண்டு என்கிறார் தோனி, ஆனால் தமிழ் இலக்கிய மேதை ஜி.நாகராஜன் தனது ஒரு நாவலுக்கு வைத்தத் தலைப்பை தோனிக்கு எதிரான விமர்சனமாக வைக்கலாம்:
"நாளை மற்றுமொரு நாளே"! வெற்றி வாய்ப்பை டாஸில் கோட்டை விட்டு அதன் பிறகு அவரும் ரெய்னாவும் பேட் செய்த அந்த இடைப்பட்ட 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே எடுத்தது,
பந்து வீச்சில் 17வது மற்றும் 18வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும், பிரவீண் குமாரும் 35 ரன்களை விட்டுக் கொடுத்தது இதெல்லாம் தோல்விக்கான காரணங்களாக தோனிக்குத் தென்படவில்லை.
ஆனால் "நாளை என்ற ஒன்று உள்ளது" என்கிறார். நாளை என்று கூறுவது நிகழ்காலத்தைத் தள்ளிப்போடும் ஒரு செயலற்றத் தன்மைதனே மிஸ்டர் தோனி?