கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » கட்டுரைகள் » மெக்கல்லம் செய்த தவறால் பிளின்டாஃபிற்கு வந்த வினை (McCullum Jeopardises Flintoff's IPL Future)
 
webdunia photo
WD
நியூஸீலாந்து அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் தனது நாட்டு கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தார், அதே போல் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தை பிளிண்டாஃப் நிராகரித்துள்ளார். காரணம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முழு நேரமாக விளையாடும் நோக்கமே. ஆனால் மெக்கல்லம் செய்த இந்த தவறால் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி புதிய விதி ஒன்றை கொண்டு வந்து கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிளின்டாஃப் கடந்த முறை 4 போட்டிகளுக்கு மேல் விளையாட முடியாமல் போனது. ஏனெனில் அவர் காயமடைந்தார் என்பது ஒன்று, அல்லது அவர் இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும்.

இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து வரும் வருவாய் குறையும். இதனை யோசித்த பிளின்டாஃப் சாமர்த்தியமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அதே சமயத்தில் தற்போது இங்கிலாந்தின் மைய ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்ததன் மூலம் அவர் முழு நேர ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராகலாம் அல்லது ஐ.பி.எல். போலவே எந்த ஒரு கிளப்பிற்கும் உலகம் முழுதும் விளையாடி பணம் செய்யலாம் என்று குயுக்தி திட்டம் தீட்டினார்.

மெக்கல்லம் என்ன யோசித்தார் எனில், கடந்த முறை அதிக பணம் வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட்டு பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிற்காக செல்ல நேர்ந்தததோடு, நியூஸீலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதால் நியூஸீலாந்து அணிக்கு விளையாட முடியாது என்று அவரால் நிராகரிக்க இயலவில்லை. இதனால் பாதியில் சென்றதால் சுமார் 282,000 டாலர்கள் தொகை மெக்கல்லமிற்கு நஷ்டம் ஏற்பட்டது.

இது போன்று நிகழாமல் இருக்க மெக்கல்லம் குயுக்தியாக யோசித்தார். நியூஸீலாந்து மைய ஒப்பந்தம் இருந்தால்தானே பிரச்சனை. அதனை நிராகரித்து விடுவோம் என்று முடிவு எடுத்து நிராகரித்தார். இதனால் என்ன என்று கேட்கிறீர்களா? ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது நியூஸீலாந்து அணிக்காக, விளையாட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய முடியாது அல்லவா? அதுதான் மெக்கல்லமின் திட்டம்.

ஆனால் இவர்கள் ஒன்று நினைக்க, லலித் மோடி வேறு ஒன்றை முடிவு செய்து 'ஆப்பு' வைத்தார். பழைய விதிகளின் படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே ஆட்சேபணை இல்லை சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். தற்போது 'ஒப்பந்தத்தில் இல்லை இருந்தாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கிறோம்' என்று வீரர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்று மோடி வைத்தார் ஒரு ஆப்பு.

webdunia photo
WD
தற்போது தேசிய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும், எந்த ஒரு வீரரும், அனுமதிப் பத்திரம் சமர்ப்பித்தால் மட்டுமே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அனுமதிக்கப்படுவர். இதுதான் லலித் மோடி கொண்டு வந்த புதிய விதி.

மெக்கல்லம் விதிமுறைகளில் ஓட்டையை தவறாக பயன்படுத்தப் போய், அது கடைசியில் பிளின்டாஃபிற்கு ஆப்பு வைத்த செயலாகிப் போனது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டால், அதன் பண மழையால் வீரர்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாடாமல் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி சொந்த வருவாயைப் பார்த்துக் கொள்கின்றனர். தேசிய கிரிக்கெட் அழிந்து விடும் என்றும், ஐ.பி.எல். கிரிக்கெட்டால் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் அழிந்து விடும் என்றும் ஐ.பி.எல். மீது அனைவரும் சாபமிட்டனர். ஆனால் தற்போது மோடி அது போன்று நிகழாமல் இருக்க உத்தரவாதம் அளித்துள்ளார்.

நாட்டிற்கு ஆடாமல் ஃபிரீலான்ஸாக தங்கள் சொந்த வருவாய்க்காக கிளப் மட்ட கிரிக்கெட்டை மட்டுமே விளையாடி பிழைத்துக் கொள்ளலாம் என்று வீரர்கள் முடிவெடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது ஐ.பி.எல். குழு.

உதாரணமாக, இங்கிலாந்து அணி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடருக்கு அனைத்து ஒப்பந்த வீரரகளும் உள்ளனர் என்று இங்கிலாந்து பேட்டிங் ஆலோசகர் ஆன்டி பிளவர் கூறியுள்ளார். இந்த தொடரில் ஒப்பந்த வீரராக பிளின்டாஃப் இருந்தால் விளையாடியாகவேண்டும். அப்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு பாதி போட்டிகள் முடிந்தவுடந்தான் பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வருவார். இதனால் ஐ.பி.எல். வருவாயில் பாதி குறைந்து விடும்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்