மேத்யூ ஹெய்டன்
உண்மையில் இந்தியாவை தனது வாயாலும், கையாலும் மிரட்டும் ஒரே ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென். குவீன்ஸ்லாந்து கண்டெடுத்த முத்து..., மேத்யூ ஹெய்டன். மேத்யூ என்பதற்கு பதிலாக மேஸிவ் (Massive) ஹெய்டன் என்று வைத்திருக்கலாம். தோற்றம் அப்படி. அடிக்க ஆரம்பித்தால் பந்து வீச்சாளர்கள் யாராக இருந்தாலும் ஓய்வறையில் இருக்கத்தான் விரும்புவார்கள். 94 டெஸ்ட்களில் 8242 ரன்கள்; சராசரி 53.51. சதங்கள் 30; எல்லாவற்றிற்கும் மேலாக கல்லி திசையில் அபாயகரமான ஃபீல்டர் 121 கேட்ச்களை பிடித்துள்ளார். துவக்க காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் டார்லிங் என்று இவர் கருதப்பட்டார். வால்ஷ், ஆம்புரோஸ், டொனால்ட், கிறிஸ் பிரிங்கிள், மெக்மில்லன் என்று மே.இ, தெ.ஆ வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை படுத்திய பாட்டில் அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.
இவர் பெரிய அளவுக்கு பேசப்பட்ட காலம் ஸ்டீவ் வாஹ் தலைமையில் 2000- 01 ஆம் ஆண்டு இந்திய தொடருக்கு வந்த போது 3 டெஸ்ட்களில் நம் வீச்சாளர்களை "ஸ்லாக் ஸ்வீப்" செய்தே 549 ரன்களை விளாசினார். சென்னை இரட்டை சதம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதன் பிறகு இவருக்கு ஏற்றம்தான். 2004- 05-ல் சரிவுகளைக் கண்டார் ஹெய்டன். ஆஷஸ் தொடரை இழந்தது ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிலும் இவரது பேட்டிங் ஒன்றும் சோபிக்கவில்லை. ஆனால் கடைசியாக இந்தியா ஆஸ்ட்ரேலியா சென்ற போது தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து நம்மை மிரட்டினார். இவரது ஆட்டம் பொறுத்தே ஆஸ்ட்ரேலியாவின் வெற்றியும் தோல்வியும் என்றால் அது ஒரு போதும் மிகையல்ல.
|