ரிக்கி பாண்டிங்:
உலக அளவில் இன்று மிகப்பெரிய பேட்ஸ்மெனாக வர்ணிக்கப்படுபவர் பாண்டிங் என்றால் மிகையாகாது. அதற்கு தகுதியானவரும் கூட. அனைத்து ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் போலவும் இவரது கிரிக்கெட் வாழ்வில் 30 வயதுக்கு மேல்தான் உச்சத்திற்கு சென்றார். அதாவது மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஆம்புரோஸ், கார்ட்னி வால்ஷ், இயன் பிஷப் போன்றவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே பேட்டிங்கில் இவரது ஆதிக்கம் உயர்ந்தது. அதன் பிறகு இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் இவருக்கு சில சதங்களை அள்ளி வழக்கியது என்றால் மிகையாகாது.
119 டெஸ்ட்களில் 10,099 ரன்கள் சராசரி 58.37. 35 சதங்கள் 40 அரைசதங்கள் என்று நம்மை மிரட்டுகிறார். 2005-ஆம் ஆண்டு 1544 ரன்கள் எடுத்தார் இதில் ஒரே டெஸ்டில் இரண்டு சதங்கள் என்ற சாதனையை 3 முறை செய்தார். 2006-ஆம் ஆண்டும் இவருக்கு ஒரு பிரமாதமான ஆண்டு 1,333 ரன்கள் குவித்தார் இவர். 2007-ஆம் ஆண்டு மறக்கப்படவேன்டியது. 13 மாதங்களுக்கு ஒரு சதம் கூட இவர் எடுக்கவில்லை. அதன் பிறகு இந்தியாவிற்கு எதிராக மட்டை ஆட்டக்களமான அடிலெய்டில் ஒரு சதம் எடுத்தார். அதன் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 158 ரன்கள் எடுத்துள்ளார்.
அன்னாரது இந்திய மண் சாதனை புல்லரிக்கத்தகுந்தது. 8 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 172 ரன்களை 13 ரன்களுக்கும் குறைவான சராசரியுடன் பெற்றுள்ளார். 1996-ல் டெல்லியில் ஒரு 65 ரன்களை எடுத்தார் அதன் பிறகு அன்னாரது மட்டை இந்தியாவில் ஒன்றுக்கும் உதவாமல் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டதுதான் மிச்சம். இந்த முறை இந்தியாவில் தனது சராசரியை உயர்த்துவதாக சூளுரைத்துள்ளார். அதற்கு கும்ளேயும், இஷாந்தும், ஹர்பஜனும் மனது வைக்க வேன்டும். பார்ப்போம்... மிகப்பெரிய வீரர்கள் எப்போது தங்களது குகையிலிருந்து வெளியே வருவார்கள் என்று கூற முடியாது.
|