பிஷன் சிங் பேடி, மனீந்தர் சிங் வரிசையில் கையை மேலாக, நன்றாகத் தூக்கி மரபான இடது கை சுழற்பந்து வீசுபவர் முரளி கார்த்திக். அவரது நேரடியான இடது கை சுழற்பந்துகளுடன், ஆர்மர் என்று அழைக்கப்படும் இடதுகை லெக் ஸ்பின்னையும் போடக்கூடியவர். ஃபிளைட், லெங்த், ஆர்க் என்று அழைக்கப்படும் அனைத்திலும் நிறைய மாற்றங்களை செய்து பேட்ஸ்மென்களை எப்போதும் யோசிக்க வைத்தவர், திணறடிப்பவர் முரளி கார்த்திக்.
எந்த ஒரு வீச்சாளரையும் அவரது ஒரு சில ஆட்டங்களை வைத்து முடிவு செய்ய முடியாது. ஆனால் முரளி கார்த்திக் வாய்ப்பளிக்கப்பட்ட அந்த ஒரு சில ஆட்டங்களிலும் நன்றாக வீசி வெற்றிக்கு வித்திட்டவர். உதாரணமாக, ஆஸ்ட்ரேலியாவிற்கு நிர்ணயித்த 103 ரன்கள் வெற்றி இலக்கை அவர்கள் எடுக்க விடாமல் செய்து மும்பையில் டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தவர்.
உலகக்கோப்பை இருபதுக்கு 20 வெற்றிக்கு பிறகு ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மகேந்திர சிங் தோனியால் மீண்டும் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு அந்தத் தொடரிலும் அபாரமாக பந்து வீசினார் 7 ஒரு நாள் போட்டிகள் தொடரில் இந்தியா வென்றது 2 போட்டிகளில்தான். அந்த 2 போட்டிகளிலும் முரளி கார்த்திக் சிறப்பாக வீசினார். இன்னொரு விஷயம் என்னவெனில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக எந்த ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரும் செய்யாத சாதனையாக 24 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த போட்டியை வெல்ல வித்திட்டவர் முரளி கார்த்திக்.
தமிழக அணிக்கு ஆடிய பிறகு, ரயில்வே அணிக்கு சென்றார் முரளி. 125 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 424 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர்! இதில் ஒரு முறை ஒரே இன்னிங்சில் 70 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அவர்.
ஆனால் இந்திய தேர்வுக்குழுவை பொறுத்தவரை அவரது சாதனைகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல் போன்றுதான். ஒவ்வொரு முறையும் நன்றாக திறமையை வெளிப்படுத்தியும் அடுத்தடுத்து அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
மொஹிந்தரும், முரளியும்!
மொஹிந்தர் அமர்நாத்திற்கு அடுத்தபடியாக இவர் அதிக முறை அணிக்கு திரும்பி வந்தவர் இவராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2002 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டியை ஆடியது முதல், 2007இல் கடைசி ஒரு நாள் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது வரை 37 ஒரு நாள் போட்டிகளை விளையாடுவதற்குள் ஒரு வீரர் 13 அல்லது 14 முறை நீக்கப்பட்டு ,பிறகு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அது முரளி கார்த்திக்தான்.
|