ரஞ்சிக் கோப்பை சாம்பியன் டெல்லி அணியுடன் மோதும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் செளரவ் கங்கூலியை தேர்வு செய்யாமல் தவிர்த்திருப்பது, அவரை டெஸ்ட் அணியில் இருந்து ஒருவழியாக ஒழித்துக்கட்டும் திட்டத்தின் வெளிப்பாடோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவில் வரும் செப்டம்பர் இறுதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடுகிறது ஆஸ்ட்ரேலியா. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் ட்ராஃபி அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டதையடுத்து, இந்தியாவிற்கு ஆஸ்ட்ரேலியாவுடனான இந்த டெஸ்ட் தொடரே உள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி ரஞ்சி சாம்பியன் டெல்லி அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையிலான இரானி கோப்பை 5 நாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நடைபெறுகிறது. அதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அணித் தேர்வுக்குழு சர்ச்சைக்குரிய புறக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக செளரவ் கங்கூலி இந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி இந்த இரானிக் கோப்பை போட்டியின் மூலமே தேர்வு செய்யப்படும் என்று பி.சி.சி.ஐ. செயலர் நிரஞ்சன் ஷா அறிவித்தாலும் அறிவித்தார், காயமடைந்திருந்த சச்சின், தன் உடற்தகுதியை தானே நிர்ணயித்துக் கொண்டு "நான் தயார் நான் தயார்" என்று அறிவித்தார்.
இலங்கை சுற்றுப் பயணத்தில் மண்ணைக் கவ்விய வீரர்களில் மும்மூர்த்திகளும் அடங்குவர், ஆனால் கங்கூலி மட்டுமே அந்த தொடரில் மோசமாக விளையாடியது போல அவரை இரானி கோப்பை போட்டியில் நீக்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சரி! கங்கூலியை விட்டுத் தள்ளுவோம்! இலங்கை டெஸ்ட் தொடரில் யுவ்ராஜ் சிங், ஜாஃபர் ஆகியோரையும் ஒதுக்கி விட்டு ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் அவ்ர் ஓய்வறையில் வீரர்களுடன் தங்கியிருந்ததுதான் மிச்சம், மீதி நேரங்களில் வயதான நம் மூத்த வீரர்கள் அவசர காரியமாக பெவிலியன் திரும்ப நேரிடுகையில் அவர்களுக்கு பதிலாக ஃபீல்டிங் செய்து "பயிற்சி" பெற்றார்.
ஆனால் திடீரென இரானி கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை! என்ன காரணம்? தேர்வுக்குழுவினர் மூச்! சச்சின் உடற்தகுதி பெற்றார் என்று அவரே அறிவித்துக் கொள்கிறார். உடனே தேர்வு செய்யப்படுகிறார். காரணம் மூச்! நாம் சச்சினையும் விட்டு விடுவோம், ஏனெனில் இந்திய ஊடகம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு, இந்திய ஊடகங்கள் ஏன், இந்திய ரசிகர்கள் உட்பட சச்சினின் குறைப்பாடுகளை பேசுவது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று!
|