முதல் ஒரு நாள் போட்டி மந்தமான ஆட்டக்களத்தில், பார்வையாளர்களே இல்லாத ஒரு விளையாட்டரங்கில், 146 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. இலங்கையும் சோடை போகவில்லை, அணியில் ஒப்புக்கு சப்பாணியாக சேர்க்கப்பட்ட முனாஃப் படேலிடம் விரைவில் இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்து, 146 ரன்கள் நீங்கள் எடுத்தால் என்ன எங்களை சுருட்டலாம், முயன்று பாருங்கள் என்று இலங்கை நினைத்தது, ஆனால் மகேலா ஜெயவர்தனே, கபுகேதரா ஆகியோர் தமாஷை நிறுத்தி வெற்றி பெற்றனர்.
இரண்டாவது ஒரு நாள் போட்டி பரபரப்பாக நடைபெற்றது என்று கூறிக்கொள்ள, அதுவும் மற்றுமொரு கேலிக்கூத்தாக அமைந்தது.
இம்முறை இலங்கை ஒன்றுமில்லாத ஆட்டக்களத்தில் 142 ரன்களுக்கு சுருண்டு, கூறினேன் பார்த்தாயா, முதல் ஒரு நாள் போட்டியில் நீங்கள் நினைத்திருந்தால் எங்களை 146ற்குள் சுருட்டியிருக்கலாம் என்பதை இலங்கை நிரூபித்தது.
அதனால் என்ன 142 என்ன சாதாரண ஸ்கோரா என்று பதிலுக்கு இந்திய வீரர்கள் கேட்டனர். 7 விக்கெட்டுகளை இழந்து படு தமாஷாக வெற்றி பெற்றது. தோனி இந்த தமாஷுக்கு நியாங்களைக் கற்பித்து வருகிறார்.
5 ஒரு நாள் போட்டிகளிலுமே இந்த தமாஷ் நிலை தொடரும் (அதற்குப் பெயர்தானே தொடர் என்பது), வீரர்கள் செய்யும் இதுபோன்ற நகைச்சுவைகளுக்கு இடையே, சர்வதேச நடுவரும் இலங்கை நடுவரும் செய்யும் தமாஷ்கள் அபாரம்! எல்.பி.டபிள்யூ. என்றால் என்னவென்றே தெரியாது போன்று சில தீர்ப்புகளை வழங்கினர்.
கடைசி வரை இதுபோன்ற போட்டிகளை நடத்துவதற்கான நியாயங்களை ஐ.சி.சி.யும் வழங்கப்போவதில்லை. பி.சி.சி.ஐ.-யும் வழங்கப்போவதில்லை. என்ன தமாஷ் வந்தாலும் பையில் பணம் நிரம்பினால் சரி என்று பி.சி.சி.ஐ. நோட்டுகளை கத்தைகத்தையாக எண்ணிக்கொண்டிருக்கிறது. நல்ல கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சாவு மணி அடிக்கப்பட்டு வருகிறது.
ஓய்வு பெறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மூத்த வீரர்களாயினும், நாட்டிற்காக விளையாட துடிக்கும் இளம் வீரர்களாயினும் தாங்கள் கிரிக்கெட் விளையாட்டின் காவலர்கள் என்பதை மறந்து வருகின்றனர். "நான் இப்போதும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாகவே ஆடி வருகிறேன், இதனால் ஓய்வு பற்றி எனக்கு சிந்திக்க ஏது நேரம்?" என்று மூத்த வீரர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக ஆடி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் அதை சகித்துக் கொள்வதுதான் முறை! இதுதான் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் ஒரே விஷயம்.
ஆனால் ஒரு நாள் அணியில் தோனி கொடுக்கும் வாய்ப்பை இளம் வீரர்கள் ஒழுங்காக தக்கவைத்துக் கொள்ளவேண்டும், இல்லையேல், இந்த மூத்த வீரர்கள் மீண்டும் இதில் தங்கள் கால்களை பதித்து, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தமாஷை கேலிக்கூத்தாகவே மாற்றி விடுவர் என்பது உறுதி. |