ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி மூலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
44 நாட்களில் 59 போட்டிகளை நடத்தி இரவு நேரத்தில் ரசிகர்களை மிகப்பெரிய பொழுது போக்கு வலைக்குள் சிக்க வைத்தது ஐ.பி.எல். கிரிக்கெட் என்றால் மிகையாகாது.
இந்தியத் தொலைக்காட்சிகளில் பிரதானமாக ஹிட் ஆகி இருந்த மெகா தொடர், ரியால்டி ஷோக்கள் உள்ளிட்ட பல்வேறு தனித்த தொலைக்காட்சித் தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது ஐ.பி.எல். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னரே சுமார் 9.9 மில்லியன் ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக சென்று போட்டிகளை கண்டுகளித்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
முதல் நாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிரன்டன் மெக்குல்லம் அடித்த அதிரடி 158 ரன்கள் என்ற துவக்கம் இந்த கிரிக்கெட் தொடரை உலகம் முழுதும் பெரிய ஹிட் ஆக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யு.ஏ.இ. ஆகிய நாடுகளில் ஐ.பி.எல். மெகா ஹிட்டாகியுள்ளது.
மிகவும் ஆச்சரியமான தகவல் என்னவெனில், அமெரிக்காவில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பதே.
இந்த விதத்தில் பார்க்கும்போது தென் ஆப்பிரிக்க நீங்கலாக, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஐ.பி.எல். போட்டிகள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஆஸ்ட்ரேலியாவிலும் இங்கிலாந்திலும் ஊடகங்கள் ஐ.பி.எல். ஆட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அங்கு ஊடகங்களில் எழுதும் பத்தி எழுத்தாளர்களான முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் அல்லது கிரிக்கெட் நிருபர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் மரபான கிரிக்கெட்டை ஐ.பி.எல். கொன்றுவிட்டது என்ற தொனியில்தான் எழுதியுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றி குறித்த அவர்களது பார்வைகள் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகங்களில் ஆசிய கிரிக்கெட் வாரியங்களின் ஆதிக்கம் குறித்த வயிற்றெரிச்சலால் விளைந்தவைகளே என்பதை ஒருவர் கணித்துவிட முடியும்.
பெரும்பாலும் ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள், வீரர்களுக்கு இன்னமும் ஐ.பி.எல். ஒப்பந்தத் தொகைகள் சரிவர வந்து சேரவில்லை என்ற செய்திகளையே பிரதானப்படுத்தியிருந்தன. ஆனால் ஒப்பந்தத் தொகை பட்டுவாடாவில் உள்ள வரி உள்ளிட்ட விவகாரங்களினால் தாமதம் ஏற்படுகிறது என்றும், இது வெறும் நடைமுறைச் சிக்கலே என்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்தும் அந்த ஊடகங்களின் வயிற்றெரிச்சல் கவரேஜ் அந்த ஒன்றையே பிராதனப்படுத்தி வந்துள்ளன.
1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் வென்று ஆசிய நாடுகள் கிரிக்கெட் சூப்பர் பவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்று நிரூபித்த போது, ஒரு நாள் போட்டிகள் முன்னெப்போதையும் விட அதிக அளவில் விளையாடப்பட்டபோது, மரபு கிரிக்கெட் ஆதரவாளர்கள், ஒரு நாள் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தவறாக விமர்சனம் செய்து வந்தனர்.
|