2007 உலகக் கோப்பையில் இளம் வங்கதேச அணி நட்சத்திரங்கள் மிகவும் மூத்த இந்திய அணியை தோற்கடித்ததால் முதல் சுற்றிலேயே வெளியேறி தொங்கிய முகத்துடன் இந்தியா வந்து இறங்கியதும், அணியின் மூத்த வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்த விமர்சனங்களுக்கு ஒவ்வொரு மூத்த வீரரும், இவர்களை ஆதரிக்கும் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வர்ணனையாளர் கூட்டமும் தங்களுக்கேயுரிய பாணியில் பதிலளித்தனர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பெரும்பாலான இவர்களின் கருத்துக்கள், நாட்டில் அவ்வளவு இளம் திறமைகள் இல்லை என்பதாகவே இருந்தது. சச்சின் வெளிப்படையாகவே ‘தான் பார்த்த வரையில் இளம் வீரர்கள் எவரும் உயர்மட்ட கிரிக்கெட்டை ஆடும் திறமை கொண்டிருக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.
அதன் பிறகுதான் இன்றைய ஐ.பி.எல். இருபதுக்கு20 கிரிக்கெட்டிற்கு வித்திட்ட ஐ.சி.எல். கிரிக்கெட்டை கபில்தேவ் அறிவிப்பு செய்தார். அதிலும் அம்பாட்டி ராயுடு, முன்னாள் வீரர் ரோஜர் பின்னியின் வாரிசு உள்ளிட்ட பல இளம் வீரர்களின் திறமையான ஆட்டத்தை நாம் காண முடிந்தது.
இப்போது ஐ.பி.எல். இருபதுக்கு20 போட்டிகளை பார்க்கும்போது சச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண், யுவ்ராஜ், ஜாகீர், அகார்கர் அடங்கிய இந்திய அணிக்கு மற்றுமொரு மாற்று அணியையும், இந்த மாற்று அணிக்கு இளம் துணை வீரர்கள் கொண்ட அணியையும் பட்டியலிட முடியும் என்பது தெளிவாகியுள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஸ்வப்னில் அஸ்னோட்கர், எவருக்கும் அஞ்சாத யூசுஃப் பத்தான், முடிவு ஓவர்களில் வெளுத்துக் கட்டும் நீரஜ் படேல், ஆர். ஜடேஜா போன்ற வீரர்களை இனிமேலும் ஒதுக்கிவிட முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெருக்கடி தருணங்களிலும் பதட்டமடையாமல் வீசிய மன்ப்ரீத் கோனி, அதிகம் அறியப்படாத, ஆனால் திறமையை நிரூபித்த பழனி அமர்நாத், பத்ரிநாத் ஆகியோர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அனைத்திற்கும் மேலாக கிரிக்கெட் அவ்வளவுதான்.. முடிந்து விட்டது என்று நினைத்திருந்த லட்சுமிபதி பாலாஜி மீண்டும் பந்து வீசி ஹாட்ரிக் எடுத்தது என்று ஐ.பி.எல் நிறைய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சித்தார்த் திரிவேதி என்ற வேகப்பந்து வீச்சாளருக்கு வயது 25தான் ஆகிறது. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது 24 வயது இருந்திருக்கும். இவர் ஐ,பி.எல் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு வீசிய ஒரு ஓவர் மறக்க முடியாதது. சச்சினை கட்டிப்போட்ட இவர், பிறகு அதே ஓவரில் அவர் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
சாலுன்கே என்ற லெக் ஸ்பின்னரின் திறமை ஷேன் வார்ன் என்ற கேப்டன் மூலமே நமக்கு தெரிய வந்துள்ளது.
டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் சேவாக்கும், காம்பீரும் கொடுக்கும் அதிரடி துவக்கம் கெடாமல் பராமரித்து பிறகு வெளுத்து வாங்கிய ஷிகார் தவான், மிதுன் மனாஸ், பந்து வீச்சில் இந்த அணியில் அமித் மிஷ்ரா, சென்னை அணி உரிமைதாரர் ஏலம் எடுக்கத் தவறிய யோ மகேஷ் ஆகிய நீண்ட பட்டியல் கொண்ட இளம் திறமைகள் உண்மையில் ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள் என்றால் மிகையாகாது.
இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சங்வான், வலது கை வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங், ஆல் ரவுண்ட் திறன் படைத்த பியூஷ் சாவ்லா.
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடிய வேகப்பந்து வீச்சாளர் டிண்டா, அழிந்துவரும் இடது கை சுழற்பந்து வீச்சிற்கு நம்பிக்கை அளிக்கும் இக்பால் அப்துல்லா, இளம் விக்கெட் கீப்பர் விருத்தி ராம் சாஹா. சேதேஷ்வர் புஜாரா, பந்து வீச்சாளர் ரணதீப் போஸ். இப்படி இளம் திறமைகளை கூறிகொண்டே போகலாம்.
|