எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஊடகங்களால் நம்பவைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனும் இருபதுக்கு 20 கிரிக்கெட் என்ற பாலிவுட் பெருங்கூத்து இம்மாதம் 18ஆம் தேதி துவங்குகிறது.
44 நாட்களில் மொத்தம் 59 போட்டிகளாக இந்த கூத்து அரங்கேற்றப்படுகிறது. இந்த போட்டித் தொடருக்காக புகைப்படங்கள், செய்திகள், உள்ளிட்ட அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.7,000 கோடி அளவில் பி.சி.சி.ஐ. இதில் பணம் பண்ணியுள்ளது. இனி அணிகளை ஏலம் எடுத்துள்ள பெரு முதலாளிகள் எப்படியாவது கவர்ச்சி காட்டி இந்த தொடரை லாபம் மிக்கதாக மாற்றி கொள்ளை அடிக்க வேண்டும்!
இதற்கு எதையாவது அடகு வைக்கவேண்டாமா? கிரிக்கெட் ஆட்டம்தான் இவர்கள் வைக்கப்போகும் அடகு!
சிறிது காலத்திற்கு முன் நம் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி வீரர்கள் நெருக்கமான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்கள் குறித்து ஐ.சி.சி.யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டம் பற்றி கடும் விமர்சனம் வைத்தனர்.
ஆனால் தற்போது... ஐ.பி.எல்.-இல் விளையாட தங்கள் உடல் தகுதியைப் பற்றியும் கவலைப்படாமல் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் உடற் பயிற்சியாளர் ஜான் க்ளோஸ்டர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முன்பெல்லாம, சரியான உடல் தகுதி இல்லாவிட்டாலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு விளையாடி வந்த வீரர்கள், இப்போது சிறு காயம் என்றாலும் உட்கார்ந்து கொள்கின்றனர். காரணம்? ஐ.பி.எல்.-இல் விளையாட உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாயிற்றே!
இன்னொரு திடுக்கிடும் ஆய்வும் ஆஸ்ட்ரேலியாவில் தற்போது நடைபெற்றுள்ளது. தற்போது ஆஸ்ட்ரேலிய கிர்க்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களில் முக்கால்வாசிப் பேர் சர்வதேச கிரிக்கெட்டையே இந்த ஐ.பி.எல்.லிற்காக விட்டு விட தயாராகியுள்ளார்களாம். சிட்னி மார்னிங் ஹெரால்ட் இன்று காலை வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், 47 விழுக்காடு தேசிய அணி வீரர்களும், 49 விழுக்காடு உள் நாட்டு அணி வீரர்களும் ஐ.பி.எல்., ஐ.சி.எல்-லிற்காக சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆப்பு வைக்கவே இந்த ஐ.பி.எல் பாலிவுட் கவர்ச்சிக் கன்னிகள் தோன்றியுள்ளனர்.
இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றால் அடுத்த முறை இந்த தொடரை நடத்துவதற்கு இன்னமும் 4 ஆண்டுகள் பிடிக்கலாம் என்று லலித் மோடி ஓ'வென்று கதறிய பிறகு, ஐ.சி.சி.யின் புதிய தலைவர் லோர்காட், ஏன் கவலை? எதிர்காலப் பயணத் திட்டத்தை ஐ.பி.எல்.இற்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
பண முதலைகளான இந்திய பாலிவுட் நடிகர்கள், நிறுவனங்கள், பி.சி.சி.ஐ. ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் நெருக்கடியைப் பாருங்கள்.
எனவே ஐ.பி.எல். போட்டிக்காக சர்வதேச பயணத்திட்டத்தை மாற்றி அமைத்தால் என்னவாகும்? ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து,கென்யா, யு.ஏ.இ. அணிகளுக்கு எதிராக தொடர்களை அமைக்கலாம். அப்போது எந்த அணியின் மூத்த வீரர்களின் உதவியும் கூட இல்லாமல் இரண்டாம் தர மூன்றாம் தர அணிகளை அனுப்பி தொடரை நடத்திக் காட்டலாம்.
|