ஆஸ்ட்ரேலிய மண்ணில் பெற்ற அபார வெற்றிகளினால் தங்கள் திறனின் மீதான தன்னம்பிக்கை பலத்துடன் உள்ள இந்திய அணி, வங்கதேசப் பயணத்தில் வாகை சூடி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
புதிய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் தன் சொந்த அணிக்கு எதிராக உத்திகளை வகுத்துக் கொடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பினை ஏற்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் கறுப்பரினத்தை சேர்ந்த 6 வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறவேண்டும் என்ற புதிய உத்தரவினால் தென் ஆப்பிரிக்க குழாமில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது அவர்கள் ஆட்டத்தை பாதிக்காவிட்டாலும் வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அணித் தலைவர் ஸ்மித்திற்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இது அவரது ஆட்டத்தை பாதிக்கலாம்.
புதிய உத்வேகமும், ஆக்ரோஷமும் கொண்ட இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா இந்த முறை சந்திக்கிறது. ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் தொடர் எந்த அளவிற்கு போட்டித் திறனுடன் விளையாடப்பட்டது என்பதை தென் ஆப்பிரிக்க அணியினர் அறிவர்.
இந்திய டெஸ்ட் அணி தென் ஆப்பிரிக்காவை ஒப்பு நோக்குகையில் பலமாகவே உள்ளது. சேவாக், ஜாஃபர், திராவிட், சச்சின், கங்கூலி, லக்ஷ்மண், தோனி ஆகியோர்கள் அடங்கிய பலமான பேட்டிங் வரிசையை தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சாளர்கள் முறியடிக்க கடுமையாக பாடுபடவேண்டும்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த புதிய உத்திகளை தென் ஆப்பிரிக்கா கண்டு பிடித்துக் கொள்வது நல்லது.
|