ஐ.சி.சி. எந்த ஒரு விவகாரத்தை பெரிதுபடுத்தி கடுமையான முடிவுகளை எடுத்தாலும் அதன் அடிப்படைகளை சிதைத்து, தான் முன்பு எடுத்த முடிவுக்கு நேர் விரோதமான அல்லது எதற்காக ஒரு சர்ச்சை எழுந்ததோ அந்த சர்ச்சையே இல்லை என்ற விதமான அந்தர்பல்டிகளை அடித்து வருவது சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் ஒன்றுதான்.
அப்படித்தான் டேரல் ஹேர் திரும்ப அழைக்கப்பட்டதும் என்று நாம் முடிவுக்கு வர முடிந்தாலும், இதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது என்றே நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
2006 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 4ஆவது இறுதி டெஸ்ட் போட்டியை ஆடியபோது 4ஆம் நாள் ஆட்டத்தில் நடுவர் டேரல் நடத்திய அருவருக்கத்தக்க நாடகங்கள்தான் சர்ச்சையை கிளப்பியது.
பாகிஸ்தான் அணியினர் பந்தை சேதம் செய்ததை டேரல் ஹேர் அறிந்துவிட்டது போல் அபராதமாக சில ரன்களை இங்கிலாந்திற்கு வழங்கினார். ரன்கள் வழங்கியது ஒரு பிரச்சனையல்ல. குற்றச்சாட்டு பலமானது. பந்தை சேதம் செய்கிறார்கள் என்று ஆதாரமில்லாத ஒன்றைக் கூறி, அதற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இதனை பிரச்சனைக்குட்படுத்த வேன்டும் என்று தீவிர நிலைப்பாட்டிற்கு சென்றபோது, மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் களமிறங்க மறுத்ததால் அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றதாக அறிவித்தார்.
இதனையெல்லாம் 'ஆட்ட நடுவர் திலகம்' ஐ.சி.சி. "நேர்மையாளர்" மைக் புரோக்டரும் வாய் மூடிய மௌனியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு டேரல் ஹேரின் குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுத்த ஐ.சி.சி குழு, முக்கிய சர்வதேச போட்டிகளில் ஹேர் நடுவர் பொறுப்பு வகிப்பதை தடை செய்ததோடு, 6 மாதகால சீரமைப்பிற்காக ஐ.சி.சி.யின் பிற போட்டிகளில் நடுவர் பொறுப்பு ஏற்கப் பணிக்கப்பட்டார்.
ஆனால் இடையே ஐ.சி.சி. தன் மீது நிறவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டுள்ளது என்று கூறி லண்டன் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, ஏகப்பட்ட தொகைகளை இழப்பீடாகவும் கேட்டிருந்தார். 6 நாட்கள் வழக்கு நடந்தாலும் எந்த ஒரு முடிவையும் இதில் எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதானால் மறுசீரமைப்பு காலத்தை ஹேர் ஏற்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்போது மறுசீரமைப்பு காலம் முடிந்துவிட்டது. டேரல் ஹேர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் பொறுப்பை வகிக்கும் தகுதியைப் பெற்றுவிட்டார் என்று ஐ.சி.சி. திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மறு சீரமைப்பு அல்லது மறு வாழ்வு என்பது என்ன? கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானாலோ அல்லது மன நிலை சரியில்லாத நிலையிலிருந்தால் மட்டுமே மறுவாழ்வு என்ற சிகிச்சை (ஆம் அது சிகிச்சைதான்) அளிக்கப்பட முடியும்.
ஆனால் ஐ.சி.சி. நடத்திய, பிற சொத்தை போட்டிகளில் டேரல் ஹேர் நடுவராக இருந்ததுதான் மறுவாழ்வு என்கிறது ஐ.சி.சி. நிர்வாகம். இது எப்படி இருக்கிறது?
|