இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) குறித்து ஆதராவாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் தேசத்தின் அவமானம் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் அனுபவமிக்க முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட், ஐ.சி.எல்-ஐ பலி கடாவாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் பல நிபுணர்களும், ரசிகர்களும், முன்னாள் வீரர்களும், வர்த்தக நிறுவனத் தலைவர்களும் ஐ.பி.எல். குறித்து உடன்பாடாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகளை வழங்கும்போது ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது. இ.எஸ்.பி.என். ஸ்டார் - நெட் வொர்க் தனக்கு சேர வேண்டிய ஒப்பந்தம் கிடைக்கவில்லை, இதற்கு ஒப்பந்தப் புள்ளியை பி.சி.சி.ஐ. தனக்கு சாதகமாக முறையற்று பயன்படுத்தியது என்று வழக்கு தொடர்ந்தது. ஸீ நெட் வொர்க், நிம்பஸ், சோனி என்று அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திற்காக மோதின. இதில் நிம்பஸ் வெற்றி பெற்றது. ஏனெனில் நிம்பஸ் குறிப்பிட்டிருந்த தொகையை இந்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் கூட நெருங்க முடியாது.
அப்போது தனிப்பட்ட ஒளிபரப்பு உரிமை பற்றி நிம்பஸ் கவலைப்படவில்லை. அதன் பிறகு இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் ஒளிபரப்புகளை தூர்தர்ஷனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. நிம்பஸ் தலையில் இடி விழுந்தது. அந்த நஷ்டங்களிலிருந்து இன்னமும் நிம்பஸ் விடுபடவில்லை. அப்போது ஸீ தொலைக்காட்சி குழுமம் நிம்பசின் உதவிக்கு வந்தது, கிரிக்கெட் ஒளிபரப்புகளை நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்டது. நிம்பஸ் மறுத்து விட்டது.
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு உலகக் கோப்பையில் நாம் தோற்று வெளியேறுகிறோம். கிரெக் சாப்பல் இந்திய மூத்த வீரர்களை மாஃபியா என்று வர்ணித்தார். இளம் வீரர்களை விளம்பர வருவாய்களுக்காக இவர்கள் அணியில் வரவிடாமல் செய்கின்றனர் என்று ஊடகங்கள் எழுதத் துவங்கி பெரும் களேபரம் ஏற்பட்ட போது, சீ தொலைக்காட்சி நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி கொடுக்க ‘இந்திய கிரிக்கெட் லீக்’ என்று தனிப்பட்ட ஒரு தனியார் மய கிரிக்கெட் லீகை அறிவித்தது. உலக வீரர்களெல்லாம் இதற்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டு பயந்து நடுங்கிய பி.சி.சி.ஐ. உடனேயே ஐ.பி.எல். என்ற ஒன்றின் துவக்கத்தை அறிவித்தது, அது நேற்று முழு வடிவத்திற்கு வந்துள்ளது.
|