கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா? திடுக்கிடும் தகவல்

Last Modified செவ்வாய், 21 மே 2019 (21:09 IST)
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முதல்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்வேல் சுமாரிவல்லா அதிகாரபூர்வ தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். தன்மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, 'இந்த குற்றச்சாட்டை நான் பத்திரிகைகளில் தான் பார்த்தேன். இதுகுறித்து நான் எதுவும் கேள்விப்படவில்லை. என் வாழ்க்கையில் நான் இதுவரை ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதே இல்லை. போட்டிக்கு முன்னர் நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்தினேன். ஊக்கமருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்ததாக வெளிவந்த செய்தி தவறு' என்று கூறியுள்ளார்.
மேலும் கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி இதுகுறித்து கூறியபோது, 'கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :