நெஞ்சத்தை விட்டு நீங்காத ’நெஞ்சில் ஓர் ஆலயம்’....


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 3 ஆகஸ்ட் 2016 (03:02 IST)
நாங்கள் தோழர்கள் இரவு பேசிக்கொண்டு இருக்கும்போது எதேச்சையாக தங்களுக்கு பிடித்த ’காதல்’ திரைப்படங்கள் குறித்து பேச்சு வந்தது.
 
 
பொதுவாக டைட்டானிக், ரோமியோ ஜுலியட் பற்றி சொன்னார்கள். ஆனால், எனக்கு பிடித்தப் படம் மதிப்பிற்குரிய ஸ்ரீதர் அவர்களின் ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்று சொன்னேன்.
 
நான் ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். முதன்முறை எப்படி பார்த்தேனே, இப்போதும் அதே உணர்வு...
 
எத்தனையோ காதல் படங்களை பார்த்திருக்கிறேன். பாப்லோ நெரூடாவின் வாழ்க்கை வரலாறான Il Postino: The Postman படம் தொடங்கி, உலக இசை பிதாமகன் வோல்ஃப்காங் அமேதியஸ் மொஸார்ட் அவர்களைப் பற்றியான Amadeus திரைப்படம் வரையிலும், ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கர்’-இல் இருந்து, ’தேவதாஸ்’, குருதத் அவர்களின் ‘பியாஸா’ வரையிலும். தமிழில், இதயத்தை திருடாதே, குணா, இதயம், சேது, அழகி, காதல், வெயில் வரையிலும் எத்தனை எத்தனையோ!.
 
ஆனாலும், ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் பாதித்த அளவிற்கு மற்ற படங்கள் பாதிக்கவில்லை என்பது நிஜம். நினைத்த உடனேயே படத்தின் மொத்தமும், மனத்திரையில் ஒருமுறை ஓடி விடுகிறது.
 
’காதல்’ என்பது வெறும் அடைதல், பெறுதல் மட்டும் கிடையாது; அது விட்டுக்கொடுப்பது, இழப்பது, எந்நிலையிலும் நேசிப்பது என்று கற்றுக்கொடுக்கும் படம். இன்றைய தலைமுறையினர் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். கால காலத்துக்கும் போற்றப்பட வேண்டிய படம்.
 
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வாழ்க்கையில் ஒருமுறைகூட அழுதது கிடையாது என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ அழ வைத்துவிடும் என்று நினைக்கிறேன்.
 
கல்யாண் குமார் அப்ப்பாபா..... ஒரு மருத்துவராகவே வாழ்ந்திருக்கிறார். அத்தனை உணர்வுகளை கொட்டு தள்ளி இருக்கிறார் மனிதன். ஒரு முதிர்ந்த மருத்துவரின் அத்தனை குணாம்சத்தையும் காட்டி இருப்பார்.
 
கல்யாண் குமாரும், தேவிகாவும் சந்திக்கும் காட்சிகளில் நம்மை அறியாமலேயே ஒருவித ஏக்கம், பதைபதைப்பு, தவிப்பு அத்தனையும் உணர முடிகிறது. இதனால், படம் முடியும் வரையிலும் இயல்பாக எழும் எதிர்பார்ப்பை தவிர்க்கவே முடியவில்லை.
 
நடிகர் முத்துராமனின் நடிப்பும் அபாரம். தனது மனைவிதான், மருத்துவரின் முன்னாள் காதலி என்று தெரிந்ததும் அவரால் வெளிப்படுத்தப்படும் நடிப்பு அபாரம். ஒரு சிறந்த ஆண்மகனுக்கான [ஆண் மகனுக்கு இருக்க வேண்டிய] இலக்கணம் அது.
 
இடையிடையே முத்துராமனின் கதாபாத்திரம் வழியே சொல்லப்படும் விதவை மறுமணம் குறித்தான இயல்புணர்ச்சி அனைத்துமே அற்புதம். ஒருபுறம் திருமணம் செய்துகொண்ட கணவன், மறுபுறம் முன்னாள் காதலன். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட தேவிகாவின் தவிப்பு!
 
மருத்துவமனையில் அந்த சிறு குழந்தை இறந்துபோகும் காட்சியிலேயே கண்ணீரை வரவழைத்து விடுவார் ஸ்ரீதர். மொத்த படமுமே உணர்ச்சி பிரவாகம்!. இடையில், நாகேஷின் தேர்ந்த நகைச்சுவை.
 
பாடல்களே நம்மை ஒருமாதிரி ஆக்கிவிடுகிறது. ’எங்கிருந்தாலும் வாழ்க’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’, ’சொன்னது நீதானா’, ’என்ன நினைத்து என்னை அழைத்தாயோ’, ’முத்தான முத்தல்லவோ’ என அத்தனையும் இசை விருந்து. பாடல்களை கேட்டே நாம் கதை புரிந்துகொள்ள முடியும். அவ்வளவு அற்புதமான வரிகள்; இசையமைப்பு.
 
உணர்வோடு பிண்ணி பிணைந்துவிடும் திரைக்கதை; அதையொட்டியான பாடல்கள்; அதற்கான பின்னணி இசை எல்லாம் சரியாக இருந்தால் வெகுஜன சினிமா கைவரப் பெறும் என்பதற்கு இந்த படம் நல்ல சான்று.
 
காட்சிகளில் பிரமாண்டம் தெரியவில்லை. ஆனால், படம் முடிகையில் ஒரு கனத்த இதயத்தை சுமக்க வேண்டி இருக்கிறது. இது உலக சினிமா இதுவன்றி வேறில்லை....


இதில் மேலும் படிக்கவும் :