ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : புதன், 17 செப்டம்பர் 2014 (12:53 IST)

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் வாழ்க்கை

அமெரிக்க விசாச் சிக்கல்கள் குறித்து, சென்ற வாரக் கட்டுரையில் அலசினோம். அதன்பின் இணையக் குழுக்களில் அது குறித்துப் பலத்த விவாதம் நடைபெற்றது. அதனால் என் நண்பர்கள், அறிந்தவர்களின் அனுபவங்களைத் தொகுத்து அளிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுவதால் இப்பதிவு.
 
மாணவனாக இருந்த காலத்தில் அமெரிக்கா வந்ததால் எப்1 எனும் மாணவர் விசாவின் சிக்கல்கள் குறித்து அறிய முடிந்தது. இங்கே கல்லூரிகளில் இரட்டைக் கட்டண முறை அமலில் உண்டு. இதன்படி பல்கலைக்கழகம் இருக்கும் மாநிலங்களின் குடிமக்களுக்குக் குறைந்த கட்டணமும், வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக கட்டணமும் உண்டு. இந்திய மாணவர்கள் இப்படி அதிக கட்டணம் கட்டும் சூழல் உருவானதுடன், அவர்கள் படிக்கும் காலத்தில் வெளியே பணிபுரிய தடையும் இருப்பதால் அவர்களுள் பலர் சட்ட விரோதமாக இந்திய உணவகம், இந்திய மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் (இவற்றில் பெரும்பாலானவை இந்தியர் நடத்துபவை) ஆகியவற்றில் பணியாற்றுவார்கள்.
 
இவையெல்லாம் சட்டப்பூர்வமான வேலை இல்லை என்பதால் இவர்களுக்குக் குறைந்த சம்பளமே வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஏழு டாலர் குறைந்தபட்ச கூலி என்றால் இவர்களுக்கு ஐந்து டாலர் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இதிலேயே எப்படியும் மாத வாடகை, உணவுச் செலவுகளை ஈடுகட்டிவிடுவார்கள். அவ்வப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள் ரெய்டு வரும் அபாயம் இருந்தாலும், பல மாணவர்கள் சட்ட விரோதமாக இதில் ஈடுபடுவதைக் காணலாம்.

 
அமெரிக்கப் பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் உள்ள சிக்கல் என்னவெனில் அங்கே அடிக்கடி கொள்ளை நடப்பதே. இரவில் காரில் துப்பாக்கியுடன் வந்து இறங்குவார்கள். எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் உணவு, ஸ்னாக் விற்கும் கடைகள் இருக்கும். கல்லாவில் இருக்கும் நூறு, இருநூறு டாலரைக் கொடுத்தால் பேசாமல் போய்விடுவார்கள். எதிர்த்துச் சண்டை போட்டால் சுட்டுவிடுவார்கள். பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் இத்தகைய ரிஸ்க் இருப்பதால் அமெரிக்கர்கள் அதிகமாக இதைச் செய்வதில்லை. இந்திய மாணவர்கள் பலர் செய்கிறார்கள். அமெரிக்கப் பெட்ரோல் பங்குகள் பலவற்றையும் குஜராத்திகள், குறிப்பாகப் பட்டேல்கள் எடுத்து நடத்துவதைக் காணலாம்.
 
பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த, மிகப் பெரும் தொகை தேவைப்படும். ஊரில் எப்படியோ போலியாக வங்கி பேலன்ஸ், சொத்துக் கணக்கு எல்லாம் காட்டி விசா வாங்கிவிட்டாலும் இக்கட்டணத்தைச் செலுத்தப் பணம் இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் இதற்குப் பயந்து வயதில் மூத்த அமெரிக்க பெண் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். படிக்கும் காலம் முழுவதும் அவர் வீட்டில் தங்கி, அவருடன் காரில் போய், அவர் இவனது கல்விக் கட்டணம் அனைத்தையும் செலுத்தி, இவனது செலவுகளைப் பார்த்துக்கொண்டார். ஊருக்கு வருடம் ஒரு முறை கோடையில் போய்வரும் செலவையும் ஏற்றுக்கொண்டார். கடைசியில் டிகிரி முடித்து ஊருக்குப் போய் அம்மா, அப்பா பார்த்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அதன்பின் அந்த அம்மையாருடன் எத்தொடர்பும் இல்லாமல் அவன் மறுபடி அமெரிக்காவில் வேறு ஊருக்குப் போய், செட்டிலாகிவிட்டான். அவனைத் தேடி அந்த அம்மையார் எங்கள் பலரையும் விசாரித்ததும் திட்டியதும் இன்னமும் நினைவில் உள்ளது.
 
மேலும்

மற்ற மாணவர்கள் ஃபீஸ் கட்ட வேறு உத்திகளைக் கையாள்வார்கள். பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெறுவது ஃபீஸ் கட்ட மிகச் சிறந்த வழி. அதனால் சிலர், சற்று இளகின மனம் உள்ள பேராசிரியராகப் பார்த்து அவர்கள் கதையைச் சொல்லி அழுது, ஸ்காலர்ஷிப் பெறுவார்கள். அமெரிக்க மாணவர்கள் இம்மாதிரி உத்திகளைக் கையாள்வது கிடையாது. இவை எல்லாமே சின்ன பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் சிலர் செய்வதுதான். ஆனால் தம் திறமையால், முயற்சியால் ஸ்காலர்ஷிப் பெறும் மாணவர்கள் ஏராளம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 
நான் படித்த பல்கலைக்கழகத்தில், என் அனுபவத்தில் இந்திய மாணவர்கள் தமக்குள் ஒரு உலகம் அமைத்து அதிலேயே வாழ்வதைக் கண்டுள்ளேன். இந்திய மாணவர் கேங் என ஒன்று உருவாகிவிடும். கூட்டாகச் சேர்ந்து தம் மாநில உணவுகளைச் சமைப்பார்கள். கார் யாரிடமாவது இருந்தால் அதில் கூட்டமாகத் தொற்றிக்கொண்டு போய், மளிகை சாமான்களை வாங்கி வருவார்கள். ஞாயிறு அன்று கிரிக்கெட் விளையாடுவார்கள். யுடியூபில் தமிழ் / இந்திப் படங்கள் பார்ப்பார்கள். அமெரிக்க மாணவர்களுடன் அதிகமாகப் பழகுவது கிடையாது. அமெரிக்காவில் டேட்டிங் எல்லாம் சகஜம் எனினும் ஏனோ அமெரிக்கப் பெண்கள் நம் மாணவர்களுடன் அதிகம் டேட்டிங் போய்ப் பார்த்தது இல்லை. மொழிப் பிரச்சனையும் ஒரு தடையாக இருக்கலாம். ஆனால் மாநில எல்லைகளைத் தாண்டி, இந்திய மாணவர்கள் பழக இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.


 
பொதுவாக நம் மாணவர்களுள் பையன்களுக்குச் சமைக்கத் தெரியாது. தனியே தங்கி இருக்கையில் சமையல் செய்துதான் சாப்பிட முடியும். இது இங்கே வீட்டில் செல்லமாக வளர்ந்த பையன்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கும். எளிதில் சமைக்கக் கூடிய ரெசிபிகளைத் தேடிச் சமைப்பார்கள். எப்படியும் டிகிரி படித்து முடிக்கையில், ஓரளவு சமையல் கலையில் கைதேர்ந்தும் விடுவார்கள்.
 
வெளியே உண்பது என்றால் சீப் ஆக உண்ண, சீன உணவகங்களை விட்டால் வேறு வழியில்லை. இந்திய உணவகங்களில் விலை அதிகம். நான் படித்த காலத்தில் சீன உணவகம் ஒன்றில் ஐந்து டாலருக்கு பஃபே முறையில் உணவு கொடுப்பார்கள். காலை 11 மணிக்கு பஃபே திறக்கும் வரை பொறுத்திருந்து அதன்பின் படை எடுப்போம். ஐந்து டாலருக்கு அன்லிமிட்டட் வெஜிட்டபிள் பிரைடு ரைஸ், சிக்கன், நூடில்ஸ் எல்லாம் கிடைக்கும். அங்கே வரும் இன்னொரு பிரிவினர், சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய மெக்சிக்கர்கள். அவர்களுக்கும் வருமானம் குறைவு என்பதால் அவர்களும் அங்கே தான் வருவார்கள். கடைசியில் பார்த்தால் பெயர் தான் சீன உணவகமே ஒழிய அங்கே உண்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்களும் மெக்சிகோ அடிமட்டத் தொழிலாளர்களும் தான். 
 
புதிய திரைப்படங்களைக் காண அனைவருக்கும் ஆவலாக இருக்கும். ஆனால் திரையரங்கில் $20 கட்டிப் படம் பார்க்க வழி இல்லை. படம் ரிலீசான சில நாட்களில் இந்திய மளிகைக் கடைகளில் திருட்டு டிவிடி வந்துவிடும். அதை வாடகைக்கு எடுக்க அடிதடியே நடக்கும்.
 
இது அத்தனையையும் தாண்டி டிகிரி வாங்கி, வேலையும் வாங்கி அதன்பின் எச்1பி, இபி1, இபி2, இபி3 என விசாச் சிக்கல்களில் அவதிப்படுவது தனிக் கதை. அது இன்னொரு பெரும் கொடுமை. ஆனால் இதை எல்லாம் தாண்டி, மாணவப் பருவ நினைவுகள் இன்று நினைத்தாலும் பசுமையாக இனிக்கவே செய்கின்றன.
 

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!