
இந்த வாரப் புனிதப் பயணத்தில் நாங்கள் உங்களை மராட்டிய மாநிலத்தில் உள்ள திரிவிக்ரம் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். கந்தேஷ் பகுதியில் செந்தூர்ணி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் 1744இல் புகழ்பெற்ற துறவி ஸ்ரீ கடோகி மஹாராஜ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.
திரிவிக்ரம் கோயிலின் சிறப்புகளைப்பற்றி அதன் தலைமைக் குரு சாந்தாராம் மஹாராஜ் பகத் பரவசத்துடன் விளக்கினார்.
ஸ்ரீ கடோகி மஹாராஜ் ஒவ்வொரு ஆண்டும் பந்தர்பூர் என்ற ஊருக்கு நடந்து சென்று கடவுள் வித்தல்-ஐ வழிபடுவது வழக்கம். இவ்வாறு ஒருமுறை அவர் பந்தர்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, கடவுளே அவருக்கு எதிரில் தோன்றி செந்தூர்ணி கிராமத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் கரையில் தான் உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்து காலண்டர்படி அது ஒரு கார்த்திகை மாதத்தின் ஏகாதசி நாள். தனது வராக வாகனத்துடன் தன்னை வெளியில் தோண்டி எடுத்து, கோயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுமாறு ஸ்ரீ கடோகி மஹாராஜை கடவுள் கேட்டுக்கொண்டார்.
இதனால் பரவசமடைந்த ஸ்ரீ கடோகி மஹாராஜ் உடனடியாகத் தனது கிராமத்திற்குத் திரும்பி, இந்த நிகழ்ச்சியை கிராமத்தாரிடம் தெரிவித்தார். ஆனால், யாரும் அவரை நம்பவில்லை. அதற்குப் பதிலாக, அவரை பலவாறாகத் திட்டியதுடன் பைத்தியம் என்றும் அழைத்தனர். இதனால் மனம் தளராத ஸ்ரீ கடோகி மஹாராஜ், தான் ஒருவனே தோண்டி சிலையை வெளியே கொண்டு வருவது என்று முடிவு செய்தார்.
அவரது அயராத உழைப்பின் பலனாக, விரைவிலேயே பழமையான வராக (பன்றி) வாகனச் சிலை ஒன்றை அவர் கண்டுபிடித்தார். கிராமத்து மக்கள் இதைப் பார்த்து மிகுந்த வியப்பும் பரவசமும் அடைந்தனர். ஸ்ரீ கடோகி மஹாராஜை அவர்கள் போற்றியதுடன், அவருக்கு உதவியும் செய்தனர். அனைவரும் தோண்டியபோது நிலத்திற்கு அடியில் 25 அடி ஆழத்தில் கடவுள் வித்தலின் நான்கரை அடி உயரச் சிலையைக் கண்டனர். பின்னர், அந்தச் சிலையைக் கோயிலில் நிறுவி எல்லாப் பூஜைகளும் செய்து வழிபட்டனர்.
|